Thursday, June 30, 2016

Swathi's Murder (ஸ்வாதியின் கொலையும் பகுத்தறிவு அற்பப் பதர்களும்)

எழுத வேண்டாமென்றுதான் நினைத்தேன், விதி யாரை விட்டது. ஒரு பெண் பட்டப் பகலில் ஜன சந்தடியுள்ள ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதக்க ஒருவரும் உதவுவாரில்லை. இந்தியாவில் கொலை செய்யப்படுவதென்றாலும் சரியான ஜாதி அல்லது சிறுபான்மையினராக இருந்தால் நியாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பாவம் ஸ்வாதி, தமிழ் நாட்டில் அரசியல் அநாதைகளான பிராமணக் குலத்தில் அதுவும் சராசரி நடுத்தரப் பிராமணக் குலத்தில் பிறந்து விட்ட அபலை. மற்ற ஜாதியினர் கொலை செய்யப்பட்ட போதெல்லாம் கொந்தளித்த இணையம் மற்றும் சமூகத்தின் மௌனம் சஞ்சலத்தை உண்டுப் பண்ண ஒய்.ஜி.மகேந்திரன் மடத்தனமாக யாரோ பார்வர்ட் செய்த செய்தியை பகிர்ந்துவிட்டார். அதில் இறந்தது பிராமணப் பெண் என்பதாலேயே மௌனம் என்றதோடு கொலை செய்தவன் பெயராக ஒரு இஸ்லாமியப் பெயரை அடையாளம் காண்பித்தது. ஈ.வெ.ரா எனும் விஷ வித்து வேரூன்றிய தமிழகத்தில் பல வெறுப்பு நாகங்கள் புற்றுகளில் இருந்து வெளிவந்தன. தமிழ் நாட்டில் எல்லோரும் சமூகத் தளங்களில் வரலாற்று உண்மைகளை மட்டுமா பகிர்கிறார்கள்? மகேந்திரன் செய்தது தவறு ஆனால் அது தான் சாக்கு என்று உடனே இவர்களின் பார்ப்பன எதிர்ப்பு எனும் வெறுப்பரசியலை கையில் எடுத்தார்கள். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பெண்ணின் இனத்தை வைத்தே அவரின் ஒழுக்கத்தைக் கேள்விக் கேட்டப் பதிவையும் பார்த்தேன். தமிழ் நாட்டில் என்று ஈ.வெ.ரா பிறந்தாரோ அன்றே நாகரீகம் அழிந்தது எனலாம். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி ஸ்வாதி கோயில் குளம் என்று போய் வரும் பெண் என்று எழுதியது தான் தாமதம் இந்தப் பகுத்தறிவு மூடர் கூடம் சினந்து கிளம்பி கேள்விக் கேட்க ஆரம்பித்தது "கோயிலுக்குப் போனால் நல்லவளா" என்று. அந்தச் சகோதரியின் பரிதாபமான மன வலி மிக்க அறிக்கைக் கூட இந்தக் கீழ்மையானவர்களுக்குத் தீனியானது. காரணம் ஸ்வாதி ஒரு பிராமணப் பெண். மகேந்திரன் ஒரு பேட்டியில் "உசந்த ஜாதிப் பெண் என்பதால் கண்டு கொள்ளவில்லையோ என்று பீல் பண்ணினேன்" என்றார். இரண்டாம் முறையாக வசை மழை "ஆ உசந்த ஜாதி என்பதா? அப்படி என்றால் நாங்கள் யார்". தவறான வார்த்தைப் பிரயோகமே. தவிர்த்திருக்கலாம். ஆனால் பேசுபவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறார், அவர் ஒன்றும் பெரிய அறிவாளியும் கிடையாது. அவர் அப்படித் தன்னை விளித்துக் கொண்டதிலும் ஒன்றும் முழுமையாகத் தவறென்று சொல்ல முடியாது. அரசாங்கமே பிராமணர்களை "முன்னேறிய வகுப்பினர்" என்று தான் குறிப்பிடுகிறது. இட ஒதுக்கீடு சலுகை வேண்டும் போது தங்களை "பிற்படுத்தப்பட்ட", 'மிகவும் பிற்படுத்தப்பட்ட' என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் போது யாரோ ஒரு ஜாதி முன்னேறிய/உசந்த ஜாதியாகத் தானே இருக்க முடியும். இட ஒதுக்கீட்டிற்காகத் தங்களை எவ்வளவு "பிற்படுத்தப்பட்ட" என்று அடையாளப் படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு "பிற்படுத்த பட்டவர்கள்" என்றும் மற்ற நேரங்களில் தங்களை "ஆண்ட ஜாதி" என்றே பெருமைப் பேசுவார்கள். இன்று மகேந்திரனின் பேச்சுக்காகக் குதிக்கும் ஈ.வெ.ராவின் பேரன்களில் எத்தனை பேருக்கு காடுவெட்டி குருவுக்கு முன்னால் போய்க் கண்டிக்கும் தைரியம் இருக்கிறது? எத்தனை ஜாதிகள் பகிரங்கமாக "ஆமாம் நாங்கள் ஆண்ட ஜாதி, அவர்கள் அடங்கித்தான் போக வேண்டும்" என்று கொஞ்சமும் லஜ்ஜையில்லாமல் நகைப்போடு வெறுப்பைச் சர்வ சாதாரணமாகப் பகிர்கின்றனர். சுப.வீரபாண்டியன் என்பவர் ஒழுக்கச் சீலர் போல் வேடமிட்டு "ஆ என்னிடம் யாராவது மகேந்திரனைப் பற்றித் தவறாகச் சொல்லி இருந்தால் அதை நான் பகிர்ந்திருப்பேனா. மாட்டேன். அவர் அப்படிச் செய்யலாமா" என்று மாய்கிறார். சுப.வீயின் தலைவர்கள் வீரமணியும், கருணாநிதியும் பேசாத புளுகு மூட்டையா? இல்லை சுப.வீ தான் யோக்கியமா? ராமதாஸுக்கு எதிராக அத்தனை அறிக்கைகளை அவர் வாசித்திருக்கிறார்? கீழ் வெண்மனி கொடுரத்தின் போது ஈ.வெ.ரா பட்டும் படாமலும் முத்துராமலிங்கத் தேவரை கண்டித்து விட்டு சம்பந்தமேயில்லாத பிராமணர்களை ஏசி விடுத்த அறிக்கை இணையத்தில் சொடுக்கினால் கிடைக்குமே. கீழ் வெண்மனியில் மட்டும் ஒரேயொரு பிராமணனாவது ஈடுப்பட்டிருந்தால் ஒவ்வொரு ஆண்டும் வீரமணியும் சுப.வீயும் ஒப்பாரி வைத்திருப்பார்கள். தமிழ் நாட்டில் எப்படிக் கொலை செய்யப்பட்டால் பிராமணனாக இருக்கக் கூடாதோ அதே போல் கொலை செய்பவன் பிராமணனாக இல்லையென்றால் அதுவும் கெட்டதே ஏனென்றால் அதை வைத்தும் அரசியல் செய்ய முடியாது ஈ.வெ.ராவின் விஷ விருட்சங்களால். நான் பார்க்க நேர்ந்த ஒரு பதிவில் ஒருவர் மகேந்திரனின் மீது வன்முறை பிரயோகிக்க வேண்டும் என்ற தொனியில் எழுதி இருந்தார். உடனே ஒரு திமுகப் பிரமுகர் முன் வந்து "பெரியார் இன்று இருந்தால் உங்களை அவரது தடியாலேயே அடித்திருப்பார்" என்றார். நான் சிரித்துக் கொண்டேன் பாவம் அந்த உடன்பிறப்புக்குத் தெரியாது ஈ.வெ.ராவின் வன்முறை தூண்டும் பேச்சுகளும் நடத்தையும். பிராமணர்களை அடிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்ததே ராமசாமி நாயக்கர் தானே? இன்னொரு பக்கம் சில பிராமணர்களின் பதிவுகளும் கண்டனத்துக்குரியன. நான் ஈ.வெ.ராவை விமர்சித்து (அர்ச்சித்து) எழுதும் போதெல்லாம் ஒன்றிரண்டு பிராமணர்களாவது ஓடி வந்து கடந்த கால வரலாற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாக 'whitewash' செய்து ஒன்றுமே நடக்காதது போல் பின்னூட்டமிடுவதும் நடப்பது தான். நான் பார்த்த இன்னொரு பதிவு பிராமணர்கள் சாதுவானவர்கள் என்று வன்முறையில் ஈடுப்பட்டது கிடையாது என்ற ரீதியில் சென்றது. "வன்முறை என்பது ஸ்தூல அளிவிலானதே என்பது ஒரு ஆரம்ப அறிவே ஆகும் (elementary knowledge)"என்று ஜெயகாந்தன் தன்னுடைய ஒரு கதையின் முன்னுரையில் கூறியிருப்பார்.சக மனிதனின் தொடுதல் கூட அல்ல அவன் நிழல் கூடத் தன் மேல் விழக் கூடாதென்று நினைக்கும் வன்முறை ஒரு உயிரைக் கொல்லும் வன்முறையை விட மேலானது. உடன்பிறப்புகள் "ஆஹா பார்த்தாயா அதை மாற்றியது ஈரோட்டு சம்மட்டி தானே" என்று வக்காலத்து வாங்க ஓடி வருவார்கள். ஈரோட்டு சம்மட்டி ஒரு ஆணியையும் புடுங்கவில்லை என்பதே உண்மை. ஜஸ்டிஸ் பார்ட்டி, அதன் பிறகு காந்தியின் தலைமையிலான காங்கிரஸே மாற்றங்களுக்குக் காரணம். ஈரோட்டுக்காரர் சாதித்ததெல்லாம் இன வெறுப்பை வைத்து அரசியல் நடத்தலாம் என்று கற்றுக் கொடுத்ததே. மேலும் பிராமணர்களை மட்டுமே ஜாதி வெறியர்களாக முன்னிறுத்தி மற்றவர்களின் ஜாதி வெறிக்கு ஒரு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தது தான். நடப்பது ஜெயலலிதாவின், அதாவது பிராமணப் பெண்ணின், ஆட்சியாம் அது வேறு அடிக்கடி மேற்கோள் காட்டப் படுகிறது. இது என்ன மன நோய்? கொலை செய்த பாதகனுக்கு மாநில முதல்வரின் ஜாதியோ ஸ்வாதியின் ஜாதியோ முக்கியமேயில்லை. ஏன், தன்னை மூச்சுக்கு முன்னூறு தரம் "சூத்திரன்" என்று அடையாளப் படுத்திக் கொள்ளும் கருணாநிதி ஆட்சியில் பிராமணரல்லாதோர் கொலை செய்யப் படவில்லையா? தினகரன் அலுவலகத்தில் இறந்தவர்கள் யார்? அப்படிக் கொல்லப் பட்டவர்களின் உறவினர்களிடம் "எல்லாம் உங்கள் ஆட்சி தானே!" என்று எந்த மடையனாவது சொல்வானா? மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் ஸ்வாதியின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள். கொலைக்காரன் கண்டு பிடிக்கப்பட்டுத் தூக்கில் இடப்படும் நாளே அக்குடும்பத்திற்கும் நியாயம் வேண்டுவோருக்கும் ஆறுதலான நாள். குறிப்பு: இந்த "பெரியார் பிறந்ததால் தான் தமிழன் செருப்புப் போட்டான்" என்றோ "ஆ மரணத் தண்டைனையே கூடாது, இறந்த உயிர் வரவாப் போகிறது" என்பன போன்ற அசட்டுப் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும்.




9 comments:

K.R.அதியமான் said...

///கீழ் வெண்மனி கொடுரத்தின் போது ஈ.வெ.ரா பட்டும் படாமலும் முத்துராமலிங்கத் தேவரை கண்டித்து விட்டு சம்பந்தமேயில்லாத பிராமணர்களை ஏசி விடுத்த அறிக்கை இணையத்தில் சொடுக்கினால் கிடைக்குமே.///

இல்லை. அப்படி எல்லாம் பேசவில்லை அவர். கம்யூஸ்டுகளை தான் சாடியிருக்கிறார் :

12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.1969) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீடு வெளிப்படுகிறது.

“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல. தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆட்சியைப் பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்குத் தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும். (குறிப்பு : “கீழ்வெண்மணி” பற்றிப் பெரியார் விடுத்த அறிக்கை 28.12.1968இல் “விடுதலை” இதழில் வெளிவந்துள்ளது. ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ இரண்டாம் பதிப்பில் (2010) இது உள்ளது. - ஆ-ர்)

Vetri said...

மிக அருமை

SOLVOM VELVOM said...

அருமை நன்பரே

செங்கதிரோன் said...

மகேந்திரன் சொன்ன முதல் வரிக்கான (உயர்சாதி) எதிர்வினையை மட்டுமே இந்த முழுக் கட்டுரை அலசுகின்றது. சுப்ரமணியசாமி முதல் கொண்டு மகேந்திரன் வரை அனைவருமே பொறுக்கிகள் என்று குறிப்பிடுகின்றார்களா அதைப் பற்றி ஏன் ஒரு கண்டனம் கூட இந்தப் பதிவில் இல்லை. இது போன்று தொடர்ந்து எழுதி ஒரு குறிப்பிட்டவர்களின் ஆதரவாளராக நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வது சரியல்ல என்றே நினைக்கின்றேன். உங்கள் எழுத்து அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

RAJUKHAN SR RAJESH said...

நல்ல கட்டுரை உண்மையான நெஞ்சினில் இருந்து வரும் நிஜத்தைக் நெருங்கும் கட்டுரை ஆனால் முதல் வரிக்கு அடுத்த வாக்கியம் சற்று தவறுதலாக மாறுபட்டு நிற்கிறது., முதல் வாக்கியத்தில் ஸ்வாதி தாக்கப்படும் பொழுது அவர் சென்னையில் வசிக்கும் தினசரி வேலை நிமித்தமாக தொடரியில் பயணிக்கும் சராசரி பெண் அதுதான் நிதர்சனம், ஆனால் சென்னை பொதுமக்கள் யாவரும் கண்டுகொள்ளாமல் சுயநலத்துடன் தாக்குதலின் போதும் அதன் பின்னரும் விலகி சென்றுள்ளனர், இதை நாம் கண்டிகாமல் விடும் பொழுது வெகு ஜனத்தில் இருந்து தனித்து தனி திரளாக தெரிய நேரிட்டுள்ளது

பூவண்ணன் said...

நடந்த நிகழ்வை பற்றியோ தமிழ்நாட்டை பற்றியோ எதுவுமே அறியாமல் வெறுப்பை மட்டுமே கக்குவதை வாடிக்கையாக கொண்ட ஒருவரின் பதிவு

காலை 6 மணி முப்பது நிமிடத்துக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 300 மீட்டர் பிளாட் பாரமில் 10 பயணிகள் இருந்தால் அதிகம்.ஆயிரக்கணக்கான/நூற்றுக்கணக்கான மக்கள் இருந்து கண்டு கொள்ளாமல் விட்டது போல பலரும் எழுதுவது எவ்வளவு உள்நோக்கம் கொண்டது .


கோத்திராவில் கொல்லப்பட்டதற்காக,இந்திரா காந்தி இறந்ததற்காக ,மதக்கலவரங்கள் என்று நாடு முழுவதும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் போல தமிழ்நாட்டில் நடந்ததா. உங்களின் ஆதர்ச நேரு ஆட்சியில் நடந்த,அவர் பதவி வெறி பிடித்து வெள்ளையரிடம் பதவி கோரி கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த பல லட்சம் படுகொலைகள் போல தமிழ்நாட்டில் நடந்ததா .இந்த அழகில் அவர் பெரியார் வந்து நாகரீகம் அழிந்தது என்று கூசாமல் அடித்து விடுகிறார்

ஒய் ஜி மகேந்திரன் தலித் பெண் என்றால் ராகுல் வந்திருப்பான், இஸ்லாமிய பெயரை கொலையாளிக்கு ?கண்டுபிடித்தது , திராவிட பொறுக்கிகள் ,காம்ரேட் கயவர்கள் என்று பதிவிட்டதில் தவறு இல்லை என்று சொல்ல உங்களை போன்ற காம்ரேடுகளால் மட்டுமே முடியும்.

முதல்வர் இஸ்லாமிய சமூகம் அல்லது முத்தரையர் என்று வைத்து கொள்வோம்.தமிழ்நாட்டில் எங்கு சாதி,மத ரீதியான கொலைகள் நடந்தாலும் அவரை சாதியை வைத்து ஒரு பக்க சார்பாக நடக்கிறார் என்று பேச மாட்டார்களா.கலைஞர் என்னமோ மோடி சிறுபான்மையினரிடம் காட்டிய விரோதத்தை ,வெறுப்புணர்ச்சியை காட்டுவதை போல ஒன்றுமே இல்லாத போதே ஊதி பெரிதாக்கும் கூட்டம் தானே இன்று நடுநிலை நியாயங்கள் விளக்கும் கூட்டம்

பூவண்ணன் said...

புனித தாமஸ் மலையில் இருக்கும் சர்ச்சில் பணியில் இருந்த பாதிரியார் ஒருவரை திடீரென்று ஒரு ஹிந்துத்வர் சென்று மதமாற்றமா செய்கிறீர்கள் என்று அரிவாளால் வெட்டி கொலை செய்தார் .இன்று விடுதலையாகி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்.

ஸ்வாதி போது இடத்தில் வெட்டி கொலை செய்ய்யப்பட்டது போல அதே முறையில் கொல்லப்பட்ட வருக்கு ஆதரவாக பல ஆயிரம் குரல்கள் அன்றும் இன்றும் இருந்தன.இங்கு கொலையாளிக்கு ஆதரவாக அது போல ஒரு குரலாவது இருக்கிறதா.கொலையாளியின் சாதியும்,மதமும் மக்கள் எடுக்கும் நிலையை இன்றும் முடிவு செய்வது வருந்த வேண்டிய ஒன்று.பாதிரியாரை கொன்றவருக்கு ஆதரவாக இருந்த பெரும்பான்மையான குரல்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களின் குரல்கள் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்

இங்கும் வேறு மதத்தை சார்ந்த ஒருவரை விரும்புகிறாயா என்று நடந்த கௌரவ கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.ஆனால் யாராவது அப்படி பேசினார்களா,எழுதினார்களா.கொலையாளிக்கு ஒரு இஸ்லாமிய பெயரை வைத்து எழுதிய கூட்டம்,மதவெறியை தூண்டிய கூட்டம் மற்றவருக்கு பாடம் போதிப்பது விந்தை தான் .

பூவண்ணன் said...

பிராமண பெண் என்பதால் கொலையில் யாரும் அக்கறை காட்டவில்லை என்பதில் துளியாவது உண்மை இருக்கிறதா.பிராமணர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பது மிக பெரிய போய். இந்தியாவில் உள்ள பிராமணர்களில் தமிழ்நாட்டு பிராமணர்கள் தான் மற்ற அனைவரையும் விட அனைத்து அளவுகோல்களின் கீழும் பல மடங்கு மேலே இருக்கிறார்கள்.இது தான் நிதர்சனமான உண்மை. கடந்த 50 ஆண்டுகள் திராவிட கட்சியின் ஆட்சியில் அவர்களின் பொருளாதார,சமூக மாற்றங்களை மற்ற மாநிலங்களில் உள்ள பிராமணர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் உள்ளங்கை நெல்லிக்கனி போல உண்மைகள் விளங்கும்.

நிலை இப்படி இருக்க கூசாமல் பிராமணர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று திருப்பி திருப்பி எழுதுவதும் ,பேசுவதுமாக இருப்பது நியாயமா

http://www.ucanews.com/story-archive/?post_name=/2006/12/13/catholics-condemn-murder-of-church-worker-demand-fair-investigation&post_id=6589

Mary said that when Fernandez told Babu to see the parish priest, the man brandished the machete and hacked Fernandez continuously in front of a shocked crowd of more than 100 people, including foreign tourists.

After killing Fernandez, Babu smeared some of the blood on his forehead. He then entered the shrine and broke the statues of Saint Joseph and Saint Francis of Assisi, narrated a shocked Mary.

As he broke the statues, blood dripping from the machete splashed around the historic shrine onto venerated relics such as a stone cross said to have been carved by Saint Thomas the Apostle and a picture of the Blessed Mother said to have been painted by Saint Luke.

Police, who arrested the assailant the next day, initially claimed he was in a mentally "unstable state" and that there was no motive for the murder. They also reported that when arrested, Babu screamed at the police saying, "Don´t touch me, I am God." They recovered long swords and sickles from his house.

However, Church officials dismiss this claim. "How can a person who runs a website be mentally unsound?" Father Chinnadurai asked. Babu reportedly ran a website, www.meineri.org. Meineri means "true faith" in the Tamil language.

PV said...

இப்பொதுதான் பார்த்தேன்.

என்ன தமிழ் எழுதுகிறீர்கள்? நுங்கள் கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படியுங்கள்.

//ஒரு பெண் பட்டப் பகலில் ஜன சந்தடியுள்ள ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதக்க ஒருவரும் உதவுவாரில்லை//

You mean, no one has come forward to kill her and allow her to lie in a pool of her blood?

ஒரு பெண் பட்டப் பகலில் ஜன சந்தடியுள்ள ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதைத் தடுக்க‌ ஒருவரும் உதவுவாரில்லை - என்றெழுதினால் சரி.