Sunday, October 23, 2016

இளையராஜாவும் சினிமாவுக்குப் போன சித்தாளும்

"எனது எழுத்துக்கள் எல்லாமே எவர் எவர் மனத்தையோ உறுத்தும். அந்த உறுத்தல் நல்லது. அதற்கு நானா பொறுப்பு? 'பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்' என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம் 'பொழுதுபோக்கும்' 'கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தலும்' ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும் இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிறபோது அதற்காவது மரியாதை தர வேண்டாமா?" 

தமிழகமே எம்ஜியார் எனும் மந்திரத்தால் கட்டுண்டு கிடந்த போது சமூகத்தின் மீது பேரன்பு கொண்ட கலைஞனாக ஞானாவேசத்தோடு, ஆனால் மிகக் குன்றிய இலக்கியத் தரத்தோடு, ஜெயகாந்தன் எழுதிய 'சினிமாவுக்குப் போன சித்தாளு' கதையின் முன்னுரையில் தான் மேற்சொன்ன அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார். 

இளையராஜா அமெரிக்கா வரும் ஒவ்வொரு முறையும் அல்லது ரஜினி படம் வெளிவரும் போதும் இங்கே தமிழர்கள் வேப்பிலைக் கட்டிக் கொண்டு ஆடுவதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சித்தாளும் ஜெயகாந்தனின் 'பாரீஸுக்குப் போ' கதையும் மனத்தில் நிழலாடும். இளையராஜாவையும் அவர் நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரையும் கடிந்தும் நக்கலடித்தும் நான் சமூக வலைதளங்களில் இடும் பதிவுகள் சில நட்புகளையும் சில உறவுகளையும் எரிச்சல் அடைய செய்திருக்கின்றன. அப்போதெல்லாம் கேள்விக் கணைகள் என் மீது தொடுக்கப் படும். 'உனக்குச் சங்கீதம் தெரியுமா?', 'இதையெல்லாம் சொல்ல உனக்கென்ன தகுதி?', 'தமிழர்களின் சாதனைகளை நிராகரிப்பதே உன் தொழில்' என்று தொடங்கி மேலும் வசைகள் வரும். அவ்வப்போது அவற்றுக்குப் பதில் சொன்னாலும் அவற்றைத் தொகுத்து கலை மற்றும் இசைப் பற்றிய என் அவதானிப்புகளை முன் வைக்க இது ஓரு முயற்சி. இப்பதிவின் மூலம் நான் யார் மனதையும் மாற்ற முயற்சிக்கவில்லை. இது என் தரப்பும் அதற்கான நியாயங்களும் மட்டுமே. 

ஆமாம் நான் சங்கீதம் பயின்றவனல்ல. இந்தப் பதிவில் இசை என்பதை ஒரு கலை வடிவமாகவும் சங்கீதம் என்பதை ஒரு அனுபவமாகவும் முன் வைத்து தான் நான் எழுதுகிறேன். மேலும், ராஜாவை ராகதேவன் என்று உருகும் பலருக்கு, என்னைப் போலவே, இசைப் பயிற்சி கிடையாது. பெரும்பாலோருக்குத் தமிழ் திரையிசைத் தாண்டி ஒரு சுக்கும் தெரியாது. சங்கீதம் பயின்றோரில் பெரும்பாலோர் கர்நாடக சங்கீதத்தை வெறும் இலக்கணமாகப் பயின்றவர்களும் அனுபவிப்பவர்களும் தான் மிகுதி. அப்பெரும்பான்மையினர் 'எந்தரோ மஹானுபாவுலு' கீர்த்தனையின் ராகம் பற்றி விடிய விடியப் பேசுவார்கள் ஆனால் அப்பாடலின் இலக்கிய நயம், பாடலின் தரம், அப்பாடல் உயிர் பெற்ற பண்பாட்டுச் சூழல் பற்றியெல்லாம் அக்கறையோ ஞானமோ கிஞ்சித்தும் இல்லாதவர்கள். ஒரு மிகச் சிறிய கூட்டம் நான் மரியாதைக் கொடுக்கக் கூடிய அளவில் சங்கீதம் பற்றியும் உலக இசை மரபுகள் குறித்தும் அறிந்தவர்கள். அவர்களுள்ளும் சங்கீதத்தைக் கலை வடிவமாகவும் அதன் தத்துவ மற்று அறிவுப் பின்புலங்கள் குறித்தும் விவாதிக்கத் தெரிந்தோர் மிகச் சிலரே. நான் இங்கே குறிப்பிடுவதெல்லாம் நம் தமிழ் கூறும் நல்லுலகைச் சேர்ந்தவர்களை மட்டுமே. 

சிந்து பைரவி, சலங்கை ஒலி, சங்கராபரணம், மோக முள் எனும் சங்கீத மாய்மாலங்கள்: 

தமிழர்களுக்குச் சங்கீதத்தை மையமாகக் கொண்ட இலக்கிய ஆக்கம் எது என்றால் 'மோக முள்' என்று சொல்லி 'அதுலப் பாருங்க தி.ஜா அப்படியே கும்பகோணத்தைக் கண்ணு முன்னாடி நிறுத்திருவார். அப்புறம் அந்தப் பாபுவின் காரக்டர், ரங்கண்ணா இசைப் பற்றிப் பேசுவது" நீட்டி முழக்குவார்கள். 'மோக முள்' பற்றிச் சொல்வதானால் அது வெறும் விடலைப் பருவத்துக் கவர்ச்சி பற்றித் தளுக்கு நடையில் எழிதிய முயற்சி. அதன் முக்கியக் கதாபாத்திரங்கள் இசையறிஞர்களாக இருக்க வேண்டிய அவசியமேயில்லை. அக்கதையை ஒரு குயவனைக் கொண்டோ, மருத்துவரை கொண்டோ எளிதாக மாற்றியமைக்க முடியும் அதன் மையக்கரு சிதையாமல். ரங்கண்ணா இசைப் பற்றிப் பேசுவதெல்லாம் மிக மேலோட்டமான கருத்துகளே அவற்றுள் எந்தத் தத்துவ விசாரணையும் கிடையாது. ரங்கண்ணாவுக்கும் சரி தி.ஜாவுக்கும் சரி அதற்கு மேல் தெரியாதுப் பாவம். 

நம்மவர்களிடம் இசையை மையமாக வைத்த படம் எது என்றால் சிந்து பைரவி, சலங்கை ஒலி மற்றும் சங்கராபரணம் என்று சொல்லிவிட்டு அதிலிருக்கும் அரைகுறை கீர்த்தனகைளை ராஜாவும் கே.வி.மகாதேவனும் கையாண்ட விதம் பற்றி நெக்குருகுவார்கள். 'மோக முள்' போன்றே இசை மையக் கரு என்றால் அது அப்படைப்பில் இருந்து பிரிக்க முடியாத அளவு இரண்டற கலந்திருக்க வேண்டும். 

மொஸார்ட் பற்றிய புனைவு 'அமடேயஸ்' அப்படிப்பட்ட படம். மொஸார்ட்டை மையமாக வைத்ததினால் மட்டுமல்ல அப்படம் அக்காலத்தில் இசைக்குச் சமூகத்தில் இருந்த இடம், இசைப் பற்றிய மதிப்பிடல்கள், படைப்பின் ஊக்கம் என்று பல அடுக்குகளாக விரிவது அப்படம். 'பாரீஸுக்குப் போ' கதையில் கர்நாடக சங்கீதமும் மேற்கத்திய செவ்வியல் சங்கீதமும் இரு வெவ்வேறு ஜெனரேஷன் மற்றும் வெவ்வேறு மரபுகளின் விழுமியங்களின் குறியீடாக நிறுத்தப்பட்டு அதனூடாகக் கதை நகரும். சங்கராபரணத்தில் மேற்கத்திய சங்கீதத்தை வெறும் ஊளை சத்தமென்று நிறுவி தன் அறியாமையைத் தான் அறியாமலேயே பிரகடனப்படுத்தினார் கே.வி.எம். 'சிந்து பைரவி' வெளிவந்த போது அப்படத்தைப் பார்த்துவிட்டாலே தான் ஒரு 'எலீட்' என்று மிதப்போடு இரண்டு நாட்களுக்குத் தரையில் கால் படாமல் நடந்தவர்கள் பலர். தன் கடைசி மூச்சு வரை நல்ல சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து மறைந்த கே.பாலசந்தரும் இசை ஞானியும் இனைந்து இசை எனும் கலைக்குத் தங்களால் முடிந்தளவு இழுக்குத் தேடித் தந்தப் படம் அது. 

"ராகத்துல புதுசு என்னதப்பா, அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப் புறத்துல சொன்னதப்பா". இந்த ஒரு வரிக்காகவே கர்நாடக சங்கீதத்தைத் தங்கள் பூர்வீக சொத்தைப் போல் பாதுகாக்கும் பிராமணச் சமூகம் பாலசந்தர், வைரமுத்து, ராஜா ஆகியோரை கழுவில் ஏற்றியிருக்க வேண்டும். நாட்டார் கலைகள் என்பது வேறு, செவ்வியல் என்பது வேறு, அம்மியரச்சவப் பாடுவது வேறு. "எல்லாமே சங்கீதம் தான் சத்ததில் பொறந்த சங்கதி தான்" என்று எழுதிய தற்குறி தான் "நிதி சால சுகமா" என்று எழுதிய மரபையும் அம்மியரச்சவப் பாடலையும் ஒன்றாகப் பாவித்து எழுத முடியும். பாரதிக்கும் வைரமுத்துவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் நம்மவர்கள். பாப் டிலனுக்கு நோபல் கொடுக்கப்பட்ட போது நம்மவர்கள் வைரமுத்துவின் நூல்கல் மொழிபெயர்க்கப்பட்டால் என்று மோவாயை சொறிந்தார்கள். 


பாப் டிலனும் வைரமுத்துவும் ஒன்றல்ல. டிலனும் ஷெல்லியும் வெவ்வேறு: 

"நடிகன் ஒரு கலைஞன்; எனினும் சமுதாயத்தில் ஒரு கவிஞனுக்கோ (பாடல் ஆசிரியன் அல்ல) ஒரு எழுத்தாளனுக்கோ (சினிமா வசனகர்த்தா அல்ல) ஒரு விஞ்ஞானிக்கோ உரிய ஸ்தானத்தை அவன் பெறவும் முடியாது, பெறவும் கூடாது". "அவரது (கண்ணதாசன்) சினிமாப் பாடல்களை நான் ரசித்தபோதிலும் கவிதைகள் என்ற பெரும் தரத்திற்கு என்னால் அவற்றை உயர்த்த முடியவில்லை". 

கண்ணதாசன் பற்றியும் கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்கும் உள்ள வேற்றுமையையும் ஜெயகாந்தன் நேர்மையாக அவரின் "ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்" புத்தகத்தில் பதிவு செய்துள்ள குறிப்புகள் தான் மேற்கண்டவை. 

பாப் டிலன் வெகு காலமாகக் கவித்துவமிக்க அவர் பாடல் வரிகளுக்காக விதந்தோதப்பட்டவர். அவருக்குச் சமீபத்தில் கிடைத்த நோபல் பரிசு அவர் இலக்கியவாதிகளின் வரிசையில் வைக்கத் தகுந்தவரா என்று விவாதத்தைக் கிளப்பிற்று. வேர்ட்ஸ்வர்த், ஷெல்லி, கம்பன் ஆகியோரை கவிஞன் என்று மதிக்கும் யாரும் டிலனுக்கு அந்த மரியாதையைக் கொடுத்துவிடலாகாது. 

ஆனால் டிலனுக்குக் கொடுக்கும் மரியாதையை எந்நாளும் வைரமுத்துவுக்கும் கண்ணதாசனுக்கும் கொடுக்கக் கூடாது. டிலன் தன் இசையை ஒரு கலையாக உபாசித்து அதன் அடித்தளமாகக் கவித்துவமான வரிகளைக் கொண்டு புரட்சிப் பற்றியும், எதிர் கருத்தாக்கங்களாகவும் முன் வைத்து ஓர் கொந்தளிப்பான காலக் கட்டத்தின் ஆன்மாவாக இருப்பவர். ஓரு எழுத்தாளன் தன் எழுத்தின் மூலமாகச் சமூகத்தின் ஆன்மாவாக விஸ்வரூபமெடுப்பது போல் அமெரிக்காவின் ஓர் யுகத்தின் பிரதிநிதி பாப் டிலன். ஹாலிவுட் படங்களுக்குப் பாடல் எழுதுபவர்களோடு அமெரிக்கர்கள் டிலனை வரிசைப் படுத்துவதில்லை. திரைப் பாடலாசிரியன் என்பவன் ஒரு வியாபாரி அவ்வளவே. அந்த வியாபாரத்தில் நேர்மயாகவோ கொஞசம் எதேச்சையான கலா மேதா விலாசத்தைக் கூட வெளிப்படுத்திவிடலாம் ஆனால் திரைப் பாடலாசிரியன் என்றுமே கவிஞன் கிடையாது. 

சங்கீத மும்மூர்த்திகளின் அறிவுக் களன் எது, என்ன பண்பாட்டுப் புலம் இப்படியொரு மகத்தான செவ்வியல் கலை ஒரு சாதாரணத் தென்னிந்திய கிராமத்தில் மலர்ந்தது என்பன பற்றி எவ்விதமான புரிதலும் இல்லாமல் இயக்குநர் கொடுத்த சிச்சுவேஷனுக்கு மெட்டுக்குப் பாட்டு என்று சமைத்துக் கொடுக்கும் வியாபாரி தான் அந்த அறிவிலி வரிகளை எழுத முடியும். 'கள்ளிக் காட்டு இதிகாசம்', 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்று இழுப்பவர்கள் எந்த நல்ல கவிதையையும் தத்துவ உரையாடலின் அறிமுத்தைக் கூட அறியாத எளியர். 

மொஸார்ட், பீத்தோவன், நினா ஸிமோன் மற்றும் திரை இசை: 

பாரீசுக்குப் போ சாரங்கண் அங்கலாய்ப்பாகச் சொல்லுவான் "இறைவனின் பாதார விந்தத்தை அடைவது தான் இசையின் பலன் என்று கருதிவிட்டால் அதில் ரௌத்திரம், சிங்காரம், மனித வாழ்க்கையின் குண வசீகரங்கள்- முதலியவற்றை வெளிப்படுத்துவது எங்ஙகனம்? இவற்றை விலக்கிவிட்டு என்ன கலை எஞ்சி நிற்கும்? கணக்குத்தான்..பக்திதான்". "காண்டெம்பரரி மியூசிக்-என்ற ஒன்று நமக்கு வரையறையோடு உருவாகவில்லையோ?" 

இந்திய இசை என்பது சினிமா என்னும் வெகுஜன இசைக்கும் செவ்வியல் நிலையை அடைந்துவிட்ட பக்தியைப் பிரதானமாகக் கொண்ட இசைக்கும் இடையே மட்டுமே ஊஞ்சலாடுகிறது. மேற்கத்திய இசை பற்பலத் தளங்களில் இயங்கும். மேற்கத்திய இசை மரபில் பல்வகைப்படும் இசை மரபுகளுக்கும் அவற்றின் கலைஞர்களுக்கும் கலை மதிப்பீட்டியலில் வெவ்வேறு ஸ்தானத்தில் மதிப்பளிக்கப்படும்.

மொஸார்ட்டுக்கும் பீத்தோவனுக்கும் கொடுக்கும் மரியாதையை நான்கு ஆஸ்கர் வாங்கியிருந்தாலும் ஜான் வில்லியம்ஸுக்கு கொடுக்க மாட்டார்கள். ஜான் வில்லியம்ஸுக்குக் கொடுக்கும் மரியாதை பிரிட்டனி ஸ்பியர்சுக்குக் கிடைக்காது. பீட்டில்ஸ் ஆராதிக்கப் படுவது போல் போனியெம் ஆராதிக்கப் படுவதில்லை. கம்போஸருக்கு கொடுக்கும் மரியாதை இசை நடத்துநருக்குக் கிடைக்காது, நடத்துநருக்கு கிடைக்கும் மதிப்பு வாத்திய குழுவினருக்குக் கிடையாது, உலகப் புகழ் பெற்ற வாத்திய விற்பண்ணன் (Virtuoso) ஆக இருந்தாலும் இசை நிகழ்வில் நடத்துனனே பிரதானம். 

மொஸார்ட்டும் பீத்தோவனும் வெவ்வேறு வகை இசைக் கலைஞர்கள். பீத்தோவன் அளவுக்குச் செவ்வியல் இசையில் அரசியலை மையமாக வைத்து இயற்றியவர்கள் குறைவு. இசை என்பது இலக்கியம் போல் ஓருக் கலை வடிவம் என்பதை மேற்கில் நன்கு உணர்ந்ததோடல்லாமல் அவ்வழியிலேயே அதன் மூலமாக விடுதலை வேட்கை, மானுட உயர்வு என்று பல கருத்தியல்கள் ஊடாடும் இசைக் கோலங்கள் பிரசித்தம். 

உலக வரலாற்றை மடை மாற்றிய தருணங்களில் எந்த நிகழ்வுகளின் போது நேரில் காண அசை என்ற பட்டியலில் ஒரு எழுத்தாளர் எகிப்தில் இருந்து யூதர்கள் வெளியேறியதாக விவிலியத்தில் கூறப்பட்ட தருணத்தோடு பீத்தோவனின் ஒன்பதாவது ஸிம்பொனி முதன் முதலில் மேடையேற்றிய தருணத்தை அடையாளம் காட்டினார். அன்று முதல் இன்று வரை அந்த ஸிம்பொனியின் வரலாற்றுப் பின்புலம் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வது எனக்கு உவப்பான ஒன்று. 

பெர்லின் சுவர் வீழ்ந்த போது அதன் கொண்டாட்டத்தில் இசைக்கப் பட்டது அந்த ஸிம்பொனி. பின்னர்த் தியானென்மென் சதுக்கத்தில் அரசாங்கத்தை எதிர்த்த மானவர்கள் அந்த இசைய நாள் முழுதும் ஒலிக்க விட்டார்கள். ஐரோப்பிய பாராளுமன்றம் அந்த ஸிம்பொனியை தன் சங்கீதமாகத் தேர்வுச் செய்தது. ஒரு ஏகாதிபத்தியின் வீழ்ச்சி, ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம், தன்னையே ஒரு அரசியலமைப்பில் இணைத்துக் கொண்டு ஒரு புதுக் கணவை முன்னெடுத்த தேசங்களின் கீதம் என்று ஒரு ஜெர்மானியக் கலைஞனின் சங்கீதம் இருந்ததென்றால் அதன் அறிவுத் தளம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? இசை என்பது வெறும் கணக்கல்ல. ஸிம்பொனி என்பதன் இலக்கணத்தை உடைத்து ஒரு மாபெரும் கவிஞனின் வரிகளைக் கொண்டு ஒரு இசைப் பிரகடணத்தையே பீத்தோவன் செய்திருப்பார். 

பீத்தோவன் இசையின் மூலம் அரசியலை முன்னிறுத்தினார் என்றால் ஆப்ப்ரிக்க-அமெரிக்கர்களின் உரிமைப் போராட்டத்தில் இசை மையப்புள்ளி. ஜாஸ் இசை என்பது வெறும் மக்களின் இசையோ நாட்டார் இசையோ அல்ல. நினா சிமோன் போன்ற ஒருவர் இசையை உரிமைப் போராட்டத்தின் ஆயுதமாகவே பயன்படுத்தினார். சிமோன் ஆகச் சிறந்த பாடகியும் பியானோ இசைப்பவரும். நினா சிமோனின் எந்த இசையின் முன்பும் தமிழ் சினிமாவின் இசையை இணைத்துப் பேசுவதே இழுக்கு. 1940-கள் தொடங்கி 1960-கள் வரையிலான ஜாஸ் இசையைக் கேட்டுப் பாருங்கள் தமிழ் திரை இசை இன்றும் எப்படிக் கற்காலத்தில் தேங்கியிருக்கிறது என்று தெரியும். டிஸ்ஸி கில்லெஸ்பி, லூயி ஆர்ம்ஸ்டிராங், ட்யூக் எல்லிங்க்டன் ஆகியோரின் முன்பு கே.வி. மகாதேவெனும், எம்.எஸ்.வியும், ராஜாவும் சிறு குழந்தைகள். 

ஆனால் இன்றும் அமெரிக்காவில் நாட்டார் இசை (Country music) துடிப்புள்ள மரபு. நாட்டார் இசை என்று ஆராய்ந்தால் அவர்களுக்கு என்று ஒரு பண்பாடு, அரசியல், கலாசாரம் உண்டு அதனூடாக முகிழ்ந்து வருவது மிக நீண்ட மரபு. 

தமிழ் திரையிசை என்பது எந்த மரபையும் பேணாத எந்த மரபையும் பண்பாட்டையும் முன்னெடுத்துச் செல்லாத வெறும் வணிகத்துக்காகவும் கேளிக்கைக்காவும் சமைத்துக் கொடுக்கப் படுவது. 

பியூக் எல்லாம் பியூக் அல்ல; இளையராஜா யோஹான் செபாஸ்டியன் பாக் அல்ல: 

இளையராஜாவை ராகதேவன் என்று துதிப் பாடும் ஒருவர் ராஜாவின் இசையில் பியூக் எப்படிப் பயன்படுத்தப் பட்டது என்று சிலாகித்து அதை யோஹான் செபாஸ்டியன் பாக் இயற்றிய பியூக் இசையோடு ஒப்பிடுகிறார். கமல் ஹாசன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெண்பா ஒன்றை இயற்றியதை சிலாகித்துத் தமிழ் பேராசிரியர் ஒருவர் கம்பன் கடினமானது என்று வெண்பாவில் காப்பியம் இயற்றவில்லை என உருகினார். தமிழர்கள்.

இசையுலகில் யோஹான் செபாஸ்டியன் பாக் ஒரு துருவ நட்சத்திரம். நிலவுக்கு விண்கலம் அனுப்பிய அமெரிக்கா வேற்றுக் கிரகவாசிகள் இருப்பின் அவர்கள் நம் மானுடத்தின் ஆகச்சிறந்த படைப்புகளைக் கேட்டு நாம் யாரென அறிந்து கொள்ளும் முகமாக ஒரு இசைத் தட்டு அனுப்பப் பட்டது. அந்த இசைத் தொகுப்பில் இருந்தது பாக் எழுதிய ப்யூக். ப்யூக் என்பது வெறும் இசைத் தந்திரமோ வணிகத்துக்காகச் சமைக்கப் பட்ட இசைத் தோரணமோ அல்ல. அதைப் பற்றி இரண்டு நல்ல புத்தகமாவது படித்திருந்தால் அது எப்படி ஒரு மிகப் பெரிய இசை மரபின் மிக முக்கியமான சாதனை என்று விளங்கும். மாறாக இசையை வெறும் இலக்கணமாகப் பயின்றவர்கள் தான் அந்த இசைச் சாதனையின் இலக்கணத்தின் சில அடிப்படை கூறுகளை ஒத்த 20 விநாடிகளே நீடிக்கும் மூன்றாந்தரச் சினிமா இசையைப் பாக் இயற்றிய மகத்துவத்துடன் ஒப்பிடுவதற்குச் சினிமாவுக்குப் போன சித்தாள்கள்களால் தான் முடியும்.

பாக் இசையமைத்த ஆறு குரல்களுக்கான (இங்கே குரல்கள் என்பது கருவிகளைக் குறிக்கும்) ப்யூக் 9 நிமிடங்களுக்கு அடுக்கடுக்காக விரிவடைந்து விஸ்ரூபமெடுக்கும் இசை இந்திரலோகம். ராஜாவின் 'மஞ்சள் வெயில்' பாடலில் ப்யூக் இசைத் தருணங்களை அடையாளப் படுத்திய ஒருவர் ஏழு தருணங்களைப் பட்டியலிடுகிறார். ஒவ்வொன்றும் 8 விநாடிகள். ஆம் விநாடிக் கணக்கு தான். மொத்தமே ஒரு நிமிடம் தான். அதுவும் மிகச் சாதாரணப் பாடலின் பிண்ணனியில்.

சினிமாவில் ப்யூக் இசை எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜான் வில்லியம்ஸ் 'ஜாஸ்' திரைப்படத்தில் அமைத்த இந்தக் காட்சியைச் சொல்லலாம். ராஜா ஆலையில்லாத இலுப்பைப் பூ சர்க்கரை. 


'ஹவ் டு நேம் இட்' எனும் கந்திரக் கோளம்: 

இசைக்கு மொழிக் கிடையாது என்றும் பாகுபாடுகள் கிடையாதென்பதும் மிகப் பிரபலமான கருத்து. அதில் உண்மையுண்டு. மேலே சொன்னது போல் தியானென்மென் சதுக்கத்தில் ஒலித்த பீத்தோவன் இசை அதற்குச் சான்று. ஆனால் அந்தக் கருத்து முழு உண்மையுமல்ல. ஒவ்வொரு கலாசாரத்திலும் பண்பாட்டிலும் வெவ்வேறு தத்துவ மரபுகளினூடாக மலரும் இசை மரபுகள் வித்தியாசமானவை. ப்யூக்கின் அடிப்படையான 'கவுண்டர்பாயிண்ட்' இந்திய தத்துவ மரபுக்கு எதிர் மறையானது ஆகவே அதன் அடிப்படை இருந்தும் அது ஒரு முழு மரபாக வளரவில்லையோ என வயலின் மேதையும் எழுத்தாளருமான யெஹுதி மெனூயின் குறிப்பிட்டுள்ளார். 

ப்யூஷன் மியூசிக் எனும் இசை மரபு கலப்பு என்பதில் ராஜாவுக்குப் பல முன்னோடிகள் உள்ளனர். முக்கியமாகப் பீட்டில்ஸ் குழுவினர் முதல் யெஹுதி மெனூயின் வரை சேர்ந்து இந்திய இசை மரபை மேற்கத்திய மரபோடு இணைத்து இந்திய இசைக்கு உலகளாவிய அறிமுகத்தைத் தொடங்கி வைத்தவர் ரவி ஷங்கர். ஜாகீர் உசேனோடு பிரமாதமான ஒரு ஜுகல்பந்தியை முடித்து விட்டு பாலமுரளி கிருஷ்ணா "நாங்கள் எந்த ஒத்திகையும் இன்றி இணைந்து அற்புதமான இசையைக் கொடுக்க முடிந்ததற்கான காரணம் இசைக்கு மொழிக் கிடையாது". 

பாலமுரளி பல கர்நாடக சங்கீதக்காரர்களைப் போலவே, யெஹுதி மெனூயின் போன்ற மேற்கத்திய இசைக் கலைஞர்கள் போலல்லாமல், அதிகம் படிப்பறிவில்லாதவர் ஆகவே தன் வித்தையில் ஜாம்பவான் ஆன அவருக்கு இசை எனும் கலை என்பது பற்றியோ கலை என்று பார்க்கும் போது அதற்குண்டான வரயறைகள் குறித்தோ எந்தப் பிரக்ஞையும் இல்லாதவர். 

இலக்கியம் எப்படி ஒவ்வொரு பண்பாட்டின் பிரதிபலிப்போ அப்படித் தான் இசையும். தல்ஸ்தோயின் இலக்கியத்தில் தமிழன் தன் ஆன்மாவைக் காண முடியும் அப்படியே பிரேம்சந்தின் கதையில் தன் வறுமையை ஒரு ஆப்பிரிக்க வாசகன் இனம் காண முடியும். ஆனால் தல்ஸ்தோய் இந்திய விவசாயி பற்றி எழுத முடியாது. பிரேம்சந்தால் நெப்போலியனின் படையெடுப்பை வைத்து கதை எழுத முடியாது. 

இசைக் கலப்பு முயற்சிகள் முயற்சிகளாகவே முற்றுப் பெறுவது இதனால் தான். ரவி ஷங்கரை இன்று உலகம் சிதார் கலைஞனாகத் தான் கொண்டாடுகிறது பீட்டில்சோடு ஜுகல்பந்தி நடத்தியவராக அல்ல. பாலமுரளியின் மேதமை கர்நாடக சங்கீதத்தில் தான். சினிமா சில சுதந்திரங்களைக் கொடுக்கும் அந்தச் சுதந்திரத்தில் சில பரிசோதனைகளைச் செய்ய முடியும். மேலும் இந்திய திரையிசைக்கென ஒரு மொழி உருவாகிவிட்டது இந்த இசை மரபுகளைக் கலந்து சமைத்துக் கொடுப்பதில். அதில் தமிழ் திரையிசையில் ராஜாவின் பங்களிப்பு முக்கியமானது. அது வேறு. 

ராஜாவின் பக்த கோடிகள் நரம்புப் புடைக்க இந்த 'ஹவ் டு நேம் இட்' பற்றிப் பிதற்றுவார்கள். இதிலும் ப்யூக் துணுக்கு ஒன்றுண்டு. இரண்டு நிமிடத்திற்கு. பாவம் ராஜாவுக்கு அதற்கு மேல் நீட்டிக்கச் சரக்கு இல்லை. வெண்பாவின் இலக்கணத்தைக் கணிதத்தின் சூத்திரம் போல் கற்றுக் கொண்ட குஷியில் வெண்பா புலிகளாக உலா வருபவர்களெல்லாம் புகழேந்தி அல்ல. யாப்பிலக்கணம் தெரிந்து வரிகளைக் கோர்த்து எழுதுபவரெல்லாம் கவிஞரல்லர். இசையை அதன் வேர்களில் இருந்து பிடுங்கி வேரற்ற ஒரு அவியலை வெகுஜன ரசனை என்னும் "lowest common denominator"-க்கு இசையமைத்தே பழக்கப் பட்டவர் தன் தகுதிக்கு மீறி முயற்சித்துப் பார்த்தார். அதை ஊக்குவிப்பது நம் கடமை. 

ராஜாவின் ஸிம்பொனி: 

இளையராஜா இசையமைத்ததாகச் சொல்லப்படும் சிம்பொனியை கேட்டவர் விண்டிலர் விண்டவர் கேட்டிலர். தமிழகமே அல்லோல கல்லோலப் பட்டது இளையராஜா இங்கிலாந்து போய்ச் சிம்பொனி இசையமைத்தார் அதுவும் ராயல் பில்ஹார்மினிக்கால் அழைக்கப் பட்டு என்ற செய்தியால். 

அந்தச் சிம்பொனி இன்றுவரை வெளிவரவில்லை ஆனால் ஒரு பேட்டியில் எஸ்.பி.பி அது குறித்து மிகவும் வளைந்து, நெளிந்து, குழைந்து கேட்டார் ராஜாவிடம். தனக்குச் சிம்பொனி என்றால் என்னவென்று தெரியாது என்றும் அவ்வகை இசையின் சிறப்பு என்னவென்று விளக்குமாறும் கேட்டார். ராஜா சிம்பொனி பற்றி எளியக் குறிப்பைச் சொன்னார். சிம்பொனி இசையமைப்பதின் சவால் பல வாத்தியங்கள் ஒருங்கே இசைக்கப்படும் போது எப்படி ஒலிக்கும் என்று கற்பனையிலேயே அந்தச் சத்தத்தை உணர்ந்து எழுத வேண்டும் என்றார். 20 நிமிட இசையை எழுதுவதற்கு மிகவும் மெனெக்கட வேண்டியிருந்தது என்றார். 




பொதுவாகச் சிம்பொனி 60 நிமிடங்களுக்கு நீளும் நான்கு பாகங்களைக் கொண்டது. வெறும் செவிக்கு இனியதாக இருப்பதோ பற்பல வாத்தியங்களின் இசைவு மட்டுமல்ல சிம்பொனி. 20 நிமிடத்திற்கே நுரைத் தள்ளியது ராஜாவுக்கு. ஆபராக்கள் எனும் இசை நாடகங்கள், பாலே என்னும் இசை நாட்டியம், ஆகியவற்றின் இசை சில மணி நேரங்கள் நீள்வது. மொஸார்த்தின் 'Le Nozze de Figaro' 3.5 மணி நேரம் நீளம். சமீபத்தில் ராஜா ஒரு கச்சேரியில் சிம்பொனி இசையை நிகழ்த்தினார். 20-30 வயலின்களும் வேறு வாத்தியங்களும் ஏனோ தானோவென்று இரைச்சலாக ஒலித்தன. 




ஒரு காலத்தில் ராஜாவின் "மனிதா மனிதா" பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் வயலின் இசையை அமர்க்களம் என்று எண்ணியது உண்டு. இன்றோ அது இலக்கில்லாமல் ஏனோ தானோவென்று எழுதப் பட்ட சத்தமான ஒலியாகவே தோன்றுகிறது. வெறுமே உச்ச ஸ்தாயியில் 20-30 வாத்தியங்கள் முழங்கினால் எளிய செவியுணர்வுக்கு அது பிரம்மாண்டமாகத் தோன்றும் என்ற 'lowest common denominator' அப்ரோச் தான் அது. 

மெட்டுக்குப் பாட்டுப் போட்ட மாணிக்கவாசகரும் பாரதியும்: 

இளையராஜாவின் 'திருவாசகம்' ஆல்பத்தை ராஜா பக்தர்கள் "ஆஹா இதோ எங்கள் ராஜாவும் சிம்பொனி எழுதிவிட்டார்" என்றார்கள். அது சிம்பொனி கிடையாதென்பது வேறு, மேற்கத்திய இசை மரபில் எழுதப்பட்ட தமிழ் திரையிசை அவ்வளவே. ஒரு நல்ல இசைக் கலைஞன் என்றால் பாடலுக்கு இசை அமைக்க வேண்டும் ஆனால் ராஜாவோ 'மெட்டுக்குப் பாட்டு' என்றே வாழ்க்கையை நடத்துபவர். தன் மனதில் தோன்றிய மெட்டுக்கு எந்தப் பாட்டு ஒத்து வரும் என்று யோசித்துப் பாட்டைத் தேர்ந்தெடுத்தார். 

ஷூபர்ட் இசையமைத்த 'விண்டரீஸ்' (Winterreise) எனும் இசைத் தொகுப்பு பற்றி ஒரு அற்புதமான புத்தகம் சமீபத்தில் வெளிவந்தது. அப்புத்தகம் பற்றி அறிய நேர்ந்த போது எனக்கு 'விண்டரீஸ்' பற்றித் தெரிய வந்தது. இலக்கியத்துக்கு இசையை ஆடையாக அணிவிப்பதென்றால் அது தான். அப்புத்தகத்தை எழுதியவர் இசைக் கலைஞர் பாஸ்ட்ரிஜ் (Bostridge). ஷூபர்ட் தேர்ந்தெடுத்த கவிதையை அதன் பின்புல ஜெர்மானிய கலாசார மரபு, என்ன வகையான இசை ஏன் அப்படி எழுதப்பட்டது என்றெல்லாம் விஸ்தாரமாக எழுதியுள்ளார். ஷூபர்ட்டுக்கு கொடுக்கும் மரியாதையை என்னால் எப்படி ராஜாவுக்குக் கொடுக்க முடியும்? 

                               The Finest piece of Schubert's 'Winterreise' - Der Lindenbaum

தாகூரைப் பற்றிப் படமெடுத்து தாகூருக்குச் சினிமாப் பாடலாசிரியரை வைத்துப் பாட்டெழுதி தாகூரை வாயசைக்க வைத்திருந்தால் வங்காளம் கொதித்திருக்கும். பாவம் பாரதி தமிழனாகப் பிறந்துத் தொலைத்தான். இயக்குனர்களுக்கே எப்படிச் சிச்சுவேஷன் அமைக்க வேண்டும் எப்படி இசையைச் சேர்ப்பது என்றெல்லாம் ராஜாவே சொல்லித் தருவார் என்று புல்லரிக்க அவர் அடிப்பொடிகள் கூறுவார்கள். 'பாரதி' படத்தில் பாரதியாருக்கு மெட்டுக்குப் பாட்டுப் போட்டு பாரதியை அவமதித்தவர் ராஜா. 'அமடேயஸ்' படம் புணைவு என்றாலும் மொஸார்ட்டின் இசையை மட்டுமே வைத்து இசையமைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அந்த இசையமைப்பாளர் அப்படத்தை ஒத்துக் கொண்டார். ஹ்ஹ்ஹ்ம்ம்ம் 

1330 திருக்குறளுக்குக் குறுகிய நேரத்தில் இசையமைத்ததற்காகச் சித்திரவீணை ரவி கிரண் கிண்ணஸ் ரெக்கார்ட் படைத்தார். இசையின் தரம்? சொல்லிக் கொள்ளும் படி இல்லை. கவனம் இசையின் மீதல்லாமல் கின்னஸ் ரெக்கார்ட் மீதல்லவா இருந்தது. 

கண்ணதாசனை அவமதித்த ராஜா: 

மிகச்சாதாரணமானப் பாடலைக் கூட நல்ல இசை மேன்மையுறச் செய்யும் என்ற அர்த்தம் தொனிக்கும் தமிழ்ப் பாடலை எந்தப் புண்ணியவானோ இசை மேன்மையாகத் தெரிய வேண்டுமென்றால் பாடல் சாதாரணமாகத் தன் இருக்க வேண்டும் என்று சொல்லித் தொலைத்து விட்டான். 

பல மேடைகளில் ராஜா கண்ணதாசனின் கவித்துவமான பாடல் வரிகளைப் பரிகசிப்பார். "தாமரை மலரில் மனதினை வைத்து தனியே காத்திருந்தேன்" என்ற வரிகளைப் பேசிக் காட்டி "கேட்பவர்களுக்கு இது புரியாது. அது என்ன தாமரை மலரில் மனதை வைப்பது, அது எப்படி" என்று இழுத்துப் பிறகு அந்த வரிகளைப் பாடிக் காண்பித்து இப்போது இசை எப்படிக் கவனத்தைத் திருப்பி அர்த்தமில்லாத வரிகளை அழகு செய்கிறது என்பார். கூட்டம் ஆர்ப்பரிக்கும். தமிழர்கள். நல்ல பாடல் என்பது திரை இசைக்கு அடி நாதம் என்பதை உணராமல் மெட்டுக்குப் பாட்டு எனும் பைத்தியக்காரத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டார் ராஜா. 

ரஹ்மானின் இசையால் ஈர்க்கப்பட்டு அவர் இசையமைத்த பாடல்களை வைத்துத் தோரணம் கட்டி நியு யார்க்கில் ஒரு இசை நாடகத்தை அரங்கேற்றினார் ஆண்ட்ரூ லாயிட் வெப்பர். ‘நியூ யார்க்கர்’ பத்திரிக்கை அம்முயற்சியைச் சாடியது, குறிப்பாகப் பாடல் வரிகளின் அசட்டுத்தனத்தை வைத்து, ‘ஷக்கலக்க பேபி’ என்றா பாடல் வைப்பது என்றது விமர்சனம். மொஸார்ட் தன் ஆபராவுக்குத் தேர்ந்த பாடலாசிரியன் தான் வேண்டுமென்று நினைத்து அதையே பௌமார்ச்சிஸ் (Beaumarchis) மூலம் சாதித்ததையும் நினைவுக் கூற வேண்டும். 

சமக் காலத்திய உதாரணம் வேண்டுமென்றால் இன்று அமெரிக்காவில் மிகப் புகழ் பெற்ற இசை நாடகமான “ஹாமில்டண்”-ஐ சொல்லலாம். அமெரிக்காவின் பிதாமகன்களில் ஒருவரான அலெக்ஸாண்டர் ஹாமில்டன் பற்றிய சரித்திரப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட இசை நாடகம். அந்நாடகத்தில் மற்றொரு சிறப்பு வெள்ளைக்கார ஹாமில்டனாக நடித்திருப்பவர் கறுப்பு இனத்தவர். ஒரு வாழ்க்கை சரித்திரப் புத்தகத்தை இசை நாடகமாக மாற்றி அதை மாபெரும் வெற்றியடையச் செய்தது மிகப் பெரிய சாதனை. இவர்களுக்குக் கொடுக்கும் மரியாதையை நான் எப்படி ராஜா, ரஹ்மான் ஆகியோருக்குக் கொடுப்பது? 

பாடல் என்பது இசைக்கு உயிர் நாடி அது தெரியாததோடல்லாமல் ஒரு சமூகத்தையே கவிதையின் முக்கியத்துவம் பற்றிப் புரிந்து கொள்ள முடியாத தற்குறிகளாக மாற்றியதில் ராஜாவுக்குப் பெரும் பங்குண்டு. 

‘இசை என்பது ஏமாற்று வேலை’ 

இளையராஜாவைப் போல் ரசிகனையும் இசையயும் ஏமாற்றுபவர்கள் வேறு யாரும் கிடையாது எனலாம். மீண்டும் மீண்டும் பேட்டிகளில் அவர் ‘இசை என்பது ஏமாற்று வேலை’ என்று நேரிடையாகவோ அல்லது அந்த அர்த்தத்திலோ சொல்லியிருக்கிறார். 

எஸ்.பி.பி எடுத்த நேர்காணலில் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஒரு சிச்சுவேஷனுக்கு முதலில் மென்மையான மெலடியைப் போட்டதாகவும் அதை நிராகரித்த கமல் “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி அன்பேன்” போன்ற துள்ளல் இசை வேண்டுமென்று கேட்டார் என்றும் அதையே “புது மாப்பிள்ளைக்கு” என்று தான் போட்டுக் கொடுத்ததாகவும் சொல்லிவிட்டு “இது ஏமாற்று வேலையில்லாமல் வேறென்ன” என்று சொல்லி, உண்மையாகவே, வெள்ளெந்தியாகச் சிரிப்பார். 

                                        "புது மாப்பிள்ளைக்கு' பாடல் ஒரு ஏமாற்று வேலை

ஒரு மேடை நிகழ்ச்சியில் கங்கை அமரன் அவர் கஷ்டப்பட்டு அமைத்த பாடல் பற்றிக் கேட்ட போது “புதிய உத்திகள் வேண்டுமானல் முயற்சி செய்து பார்க்கலாம். மியூஸிக்ல யாரும் புதுசுப் பண்ண முடியாது. ஏன்னா ‘ராகங்கள் பல கோடி எதுவும் புதிதில்லை’ந்னு நானே எழுதியிருக்கிறேன்” என்றார். 

                                           இன்னொரு ஏமாற்று வேலை

பாக், மொஸார்ட், பீத்தோவனின் இசைப் பற்றி மிகப் பெரும்பாலான தமிழர்களைவிட, ஏன் மிகப் பெரும்பாலோரை விட என்றும் சொல்லலாம், ராஜாவுக்கு நுணுக்கமாகத் தெரியும். அவரால் விடிய விடிய அவர்கள் அமைத்த இசையின் விஸ்தாரங்கள் குறித்துத் தொழில் நுட்பம் குறித்துப் பேச முடியும். ஆனால் அவர் அந்தச் சிருஷ்டிகளின் படைப்பூக்கம் குறித்தோ அவற்றை ஒரு கலைப் படைப்பாகவோ பேசத் தெரியாது. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை வெறும் கணிதக் கூறுகளாகவும் உத்திகளாகவும் பேசலாம் அதுவும் ஒரு வகைப் புரிதல் ஆனால் அது முழுமையான புரிதல் அல்ல. ராஜாவுக்கு இசையின் தொழில் நுட்பங்கள் புரிந்தளவு இசை எனும் கலை வடிவத்தின் படைப்பு ஊற்றுக் கண் புரிந்ததா என்பது கேள்விக் குறியே? 

தமிழ் திரையிசை எனும் “lowest common denominator” வகையினருக்கே இசையமைத்து தன் தகுதிக்கு மீறிய அங்கீகாரம் அளிக்கப் படுகிறது என்பதைத் தன் உள்ளத்திலாவது உணர்பவர் தான் “சங்கீதம் என்பது ஏமாற்று வேலை” என்று சொல்லி சிரிக்க முடியும். 

கம்பனும், சரோஜா தேவியும் தமிழின் 246 எழுத்துகளை வைத்து தான் எழுதுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இரு படைப்புகளிலும் இலக்கணம் கூட ஒன்று தான் அதற்காக இரண்டும் ஒன்றா? 

இசையைப் பற்றிய அறிவார்ந்த புரிதல் நம் கல்வி முறையில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை, கல்வி முறைக்கு வெளியேயோ சநாதன மரபில் சிக்குண்ட இசையயே பார்க்கிறோம். நமக்கு ஒரு பாப் மார்லியைப் புரிந்து கொள்ள மேலோட்டமாகத் தான் முடிகிறது. ராஜா ஒரு முறை, பாப் மார்லியைப் பற்றிக் கருத்துக் கேட்டதற்கு, “அரசியல் ஒரு சாக்கடை, எனக்கு அதில் இஷ்டமில்லை” என்று சொன்னதாக நினைவு. பாவம் சினிமாவுக்கு இசையமைத்த சித்தாளுக்குப் பாப் மார்லி இசை வெறும் அரசியலாகத் தெரிந்ததில் என்ன ஆச்சர்யம். 

‘தாரைத் தப்பட்டை’ - திரையிசை எனும் வியாபாரம்: 

ராஜா, திரைத் துறையில் ஈடுபடும் பலரைப் போல், ஒரு வியாபாரி, அவ்வளவே. குடுத்த காசுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டுக் கல்லா கட்டுபவர். இதற்குச் சிறந்த உதாரணம் சமீபத்தில் வந்த ‘தாரைத் தப்பட்டை’ படம். 

தமிழகத்தில் நேர்ந்துள்ள சமூகச் சீரழிவின் முக்கிய அடையாளம் நாட்டார் கலை எனும் கரகாட்டம் சீரழந்து இன்று வெறும் ஆபாசம் என்னும் எல்லையைக் கூடக் கடந்து மிக மிக அருவருப்பான வன் புணர்வு நிகழ்வுகளாக மலிந்திருப்பது தான். யூட்யூபில் கரகாட்டம் என்று தேடிப் பாருங்கள். 

அந்தச் சீரழிந்த அருவருப்பையே பாலா கடைப் பரப்பினார் இசை ஞானியின் இசையின் துணையோடு. இசை எனது ஏமாற்று வேலை என்றும் நம்பும் வியாபாரி தான் அப்படியொரு படத்துக்கு இசையமைக்க முடியும். இதில் கேவலம் அது மட்டுமல்ல. அத்திரைப்படத்தின் பிண்ணனி இசைக்கு இவருக்கு தேசிய விருது ஏனெனில் இவர் தம்பி விருது குழுவின் உறுப்பினர். இவருக்குப் பிண்ணனி இசைக்கு விருது கொடுத்துவிட்டு வேறொருவருக்குப் பாடலுக்கான இசை வழங்கப்பட்டது. ராஜா, அவருக்கெ உரித்தான காலிப் பெருங்காய டப்பா அகங்காரத்துடன், பாடல் இசைக்கான விருதும் தனக்கே கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்றார். இவர் தம்பியே பிறகு குட்டை உடைத்தார் அப்படத்தின் முக்கியமான பாடல் ராஜா வழியிலான ‘ஏமாற்று’ என்பதை. இது தான் ராஜாவின் லட்சணம். 

‘டோலக்கும் வயலினும்’: 

“ராஜாவா ரஹ்மானா” என்ற பிரபலமான கேள்விக்கும் குமுதம் பத்திரிக்கையின் கேள்வி-பதில் பகுதியில் “இந்திப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த தமிழர்களைத் தமிழ்ப் பாட்டு கேட்க வைத்தவர் ராஜா, இந்திக்காரர்களையும் தமிழ் பாட்டுக் கேட்க வைத்தவர் ரஹ்மான்” என்று பதில் கொடுத்தது. துல்லியமான பதில். 

1960-70 தமிழ் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரிடமும் படித்தவர்களிடையேயும் ஹாலிவுட்டின் மியூஸிக்கல் படங்கள், மேற்கத்திய இசைக் குழுக்களின் ரெக்கார்ட்ஸ், ஷம்மி கபூரின் யாஹூ வகைப் பாடல்கள் பிரபலம். தமிழ் சினிமாவில் ஸ்தூல உருவங்களோடு மிகத் திராபையான செட்டிங்குகளோடு சாதாரண இசையைப் பிண்ணனியாகக் கொண்டு படங்கள் வெளிவந்த போது இந்திப் படங்களில் ஷம்மி கபூரும் ஷர்மிளா டாகூரும் அவர்கள் இசையும் பணக்காரத்தனமான படப்பிடிப்புகளும் பிரபலம். 

ஆனால் அரசியல் தளத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் சமூகத்தை மெல்ல மெல்ல மாற்றின. இந்திப் படங்களின் மோகம் குறைந்தது. மேற்கத்திய இசைப் பற்றிய அறிதல் அருகியது. சரியான தருணத்தில் ராஜா தமிழ்த் திரை இசையில் காலடி வைத்தார். 

ராஜாவைக் குறித்துப் பிரம்மிக்கச் சில விஷயங்களுண்டு. இசைப் பாரம்பர்யமே இல்லாத ஏழைக் குடும்பத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்தவருக்குள் எப்படி இப்படியொரு கணல் கொழுந்து விட்டது. எம்.எஸ்.விக்கு மேற்கத்திய இசைப் பரிச்சயமில்லை. அவர் குழுவில் சேர வாய்ப்பிருந்தும் ராஜா ரிஸ்க் எடுத்து மேற்கத்திய இசை அறிந்த ஆனால் அவ்வளவு பிரபலமில்லாத தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்றதோடல்லாமல் மேற்கத்திய செவ்வியல் இசைக்கான ட்ரினிட்டி பல்கலையின் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றார் எனப் படித்த ஞாபகம். 

கே.வி.எம், எம்.எஸ்.வி ஆகியோருக்குப் பி.ஜி.எம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் கொஞ்சமாவது பி.ஜி.எம் குறித்துப் பிரக்ஞையோடு இசையமைத்தவர் ராஜா. தமிழ் திரையிசையை அதன் அடுத்தத் தளத்திற்குக் கொண்டு சென்று தமிழ் திரையிசை வரலாற்றில் கே.வி.எம், எம்.எஸ்.வி என்றொரு வரிசையில் தன் பெயரையும் பொறித்துக் கொண்டார் ராஜா. அது தான் அவருக்கு இன்றும் இசையில் இருக்கும் இடம். 

ராஜாவின் மேதமை என்று பேசும் போது நாம் அன்று யாரும் செய்யாததையா ராஜா செய்தார் என்று ஆராய வேண்டும். அப்படிப் பார்க்கும் போது இன்று அதிகம் பேசப்படும் ‘நாயகன்’ இசையை ‘காட்பாதர்’ இசையோடு (நாயகனுக்கு 13 வருடம் முன்பு வந்த காட்பாதர்) ஒப்பிட்டால் ராஜா ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது தெளிவு. 

இந்தியாவை விட்டு அமெரிக்கா வந்த பிறகு என் அறிதலின் எல்லைகள் விஸ்தீரித்தன. விலையுயர்ந்த ஆடியோ சிஸ்டத்தில் இன்று ராஜாவின் பாட்லகளைக் கேட்டால் அன்று சாதாரண 2-in-1-இல் கேட்டதை விட நல்ல அனுபவங்களாகத் தெரிகிறது. அதே சமயம் எண்பதுகளின் மத்தியில் ஆரம்பித்து அவரின் பல பாடல்களில் ப்ரீலூட் (prelude) இண்டர்லூட் (interlude) தவிரப் பெரும்பாலும் டோலக்கோ தபலாவோ பாட்டின் தாள கதிக்கு ஏற்ப ஒலிப்பது எரிச்சல் தர ஆரம்பித்தது. ஒரு பாட்டிற்கான இசை என்பது துணுக்கு துணுக்காக நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவது மடமை. இசை என்பது முழுமையான அனுபவம். பாடல் வரிகளும் இசையும் ஒரு முழுமையான அனுபவத்தைத் தர வேண்டும். அது மிக, மிக அரிதாகாவே ராஜாவின் பாடல்களில் கிடைக்கிறது எனக்கு. பெரும்பாலும் அற்புதமாக ஆரம்பிக்கும் பிரீலூட் தடக்கென்று பாட்டினுள் வழுக்கிச் சென்று டோலக்கில் முடியும்.

சமீபத்தில் பி.பி.சி.க்குக் கொடுத்த பேட்டியில் எண்பதுகளில் வந்த இசை பெரும்பாலும் ‘டோலக்கும் வயலினும் தான்’ என்று ரஹ்மான் பேசியதைக் கண்டபோது ‘யுரேகா’ என்று கத்தத் தோன்றியது. 

ராஜாவின் பக்தர்களுக்கு ரஹ்மான் பெயர் ஒவ்வாமைத் தரும். எம்.எஸ்.வி காலத்தில் இருந்து ராஜா எப்படி அடுத்தப் படியோ அப்படியே ராஜாவின் காலத்தில் இருந்து ரஹ்மான் அடுத்தப் படி. ராஜா பாடலின் ஒலியின் தரத்தில் கவனம் செலுத்தியதேயில்லை ரஹ்மானோ அதில் அதீத கவனம் செலுத்துகிறார் அதனாலேயே ராஜாவின் விசிறிகள் ரஹ்மானை சவுண்ட் இஞ்சீனியர் என்று பகடி செய்வார்கள். தவறு. சுருங்கச் சொன்னால் ராஜா எப்படி எம்.எஸ்.விக் கற்றுக் கொள்ள முனையாத மேற்கத்திய செவ்வியல் இசையைக் கற்றுத் தமிழ் திரையிசையில் ஒரு புதிய பாதைய துவக்கினாரோ அது போல் ரஹ்மான் ராஜா கற்றுக் கொள்ள விரும்பாத சமகால உலக இசை மரபுகளைக் கற்று அதைத் திரையிசையோடு பிணைத்து இன்னொரு யுகத்திற்கு அடிக்கோலினார். 'ராசாளி' போன்ற ஒருப் பாடலை ராஜாவால் கொடுக்க முடியாது.

ராஜாவை இசை வியாபாரி என்பதற்கு அவர் இசையமைத்த ஆபாசப் பாடல்களே சாட்சி. என்பதுகளில் தமிழ் சினிமாவை பீடித்த நோய் காபரே நடனங்கள். சிலுக்கு, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஆகியோரை மறக்க முடியுமா. ஜானகியை வைத்து முக்கல் முனகலுக்கே புது அர்த்தம் கொடுத்தவர் ராஜா. அந்த முக்கல் முனகலைக் கூடத் தான் சொல்லிக் கொடுத்து தான் ஜானகி பாடினார் என்று அந்தப் பெருமைக் கூட அந்தப் பாடகிக்குக் கிடைத்துவிடக் கூடாதென்று தானே உரிமைக் கொண்டாடினார் ஞானி. 

ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர் வாங்கிய போது “ஆ அது வெறும் இந்தியப் படத்துக்குக் கிடைத்த அங்கீகாரம். அதில் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது’ என்று ராஜா கும்பல் வயிறு எரிந்து சொன்னது. ‘127 hours’ திரைப்படம் முற்றிலும் இந்தியச் சூழலே இல்லாத படம் அதற்கும் ஆஸ்கர் பரிந்துரைக் கிடைத்தது ரஹ்மானுக்கு. 

‘American Hustle’ போன்ற ஒரு சாதரணப் படத்தில் எத்தனையோ இசை மரபுகள் இடம் பெறுகிறது ஆனால் ராஜா போன்ற உலக இசை மரபுகளின் பரிச்சயம் இல்லாத ஒருவரை அது போன்ற படங்களுக்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவருக்குப் பரிச்சயமில்லை என்று நான் சொல்வது அவரது பேட்டிகளையும் அவர் இசை அமைத்ததையும் வைத்தே அவருக்குத் தனிப்பட்ட முறையில் என்ன தெரியும் தெரியாதென்பதை நானறியேன். 

ரஹ்மானுக்கும் எல்லைகள் உண்டு. சங்கர், மணிரத்னம் என்ற கும்பலில் உழன்று கொண்டிருக்கும் போது ‘ஹாமில்டன்’ போன்ற ஒரு மாபெரும் இசை நிகழ்வை அவரால் எழுதி விட முடியாது. ரஹ்மானுக்கு, ராஜாவைப் போன்றே, திரை இசை என்பதைத் தாண்டி வரலாற்றில் இடம் கிடையாது. என்ன ஒன்று ராஜாவைப் போலல்லாது கொஞ்சமாவது சர்வதேசத் தரத்தை எட்டிப் பிடித்தார் ரஹ்மான். 

கௌதம் மேனன் ராஜா, ரஹ்மான் இருவரின் இசையை வைத்தும் படம் எடுத்தார். ரஹ்மானின் இசையின் தரத்தின் முன் 80-களில் உறைந்து விட்ட இசையையே மீண்டும், புளித்த மாவிலே தோசைச் சுடுவது போல், கொடுத்தார் ராஜா. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இசையின் முன் ‘நீ தானே எந்தன் பொன் வசந்தம்’ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பித்தது. 

ரஹ்மான் என்னை எரிச்சல் படுத்தும் தருணமும் உண்டு. ‘ரிதம்’ படத்தில் பஞ்ச பூதங்களுக்காக எழுதப் பட்டப் பாடல்களில் ஒன்றில் வடகத்திய பாடகர் “ள”கரத்தைக் கொலைச் செய்து லகரமாக உச்சரிப்பது நாராசம். மீண்டும் சொல்கிறேன் பாடலும், இசையும் ஒருங்கே ஒர் நல்லனுபவத்தைக் கொடுப்பது தான் முழுமையான படைப்பு. 

நான் ஏன் ராஜா, ரஹ்மான் கச்சேரிகளுக்குச் செல்வதில்லை: 

நான் பொதுவாகக் கும்பல்கள் கூடிக் கூச்சலிடும் இடங்களுக்குச் செல்ல விருப்பம் இல்லாதவன். அது பியான்ஸே நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி ராஜ, ரஹ்மான் கச்சேரிகளாக இருந்தாலும் சரி. முதலில் நாம் இசை நிகழ்வுகளை ஏன் நேரில் காண வேண்டும்? “Who needs Classical Music” என்ற அற்புதமான புத்தகத்தில் நாம் இசைத் தட்டுகளில் இசையைக் கேட்டு ரசிப்பதற்கும் நேரில் காண்பதும் வெவ்வேறு அனுபவங்களையும் அவ்வனுபவங்களின் வேற்றுமையே வெவ்வேறு புரிதலையும் தரும் என ஆசிரியர் சொன்னது எனக்கு ஒரு திறப்பைக் கொடுத்தது.

சிம்பொனியை இசைத் தகட்டில் கேட்பதற்கும் நேரில் காண்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு. அதே போல் ஆபரா. ஆனால் ஒரு பாப் நிகழ்ச்சி கொண்ட்டாட்ட மன நிலயை முன்னிறுத்தி கூட்டுக் களியை நம்பி நடத்தப்படும் அலங்காரம். அங்கே இசை பிரதானமல்ல. 

சை நமக்கு அப்பாடல்களை முதலில் கேட்டப் போது உண்டான உணர்வை மீள் உருவாக்கம் தந்து நம்மை அந்த அனுபவத்தின் சூழலுக்கு மீண்டும் அழைத்துச் செல்லும். “அடி நீ தானா அந்தக் குயில்” எனும் வரிகளின் போது சிவாஜியின் முகமலர்ச்சி எனக்கு அந்த வரிகளைக் கேட்கும் போதெல்லாம் மனக் கண்ணில் விரியும். கூடவே அதை ரசித்த அந்தப் பால்யக் காலம். ‘நேத்து ராத்திரி யம்மா’ என்று கேட்கும் போதெல்லாம் சிலுக்கு நினைவுக்கு வராதவர்கள் 80-களில் தங்கள் விடலைப் பருவத்தைக் கழிக்காதவர்கள்.

பியான்ஸே நூறு மில்லியன் அமெரிக்கர்கள் கண்டு களிக்கும் சூப்பர் பௌல் எனும் நிகழ்ச்சியின் இடைவேளையில் மிகவும் பாரட்டப்பட்ட நடன நிகழ்வை அரங்கேற்றினார். அந்த இடைவேளையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு டாலர் சம்பளம் கிடையாது வெறும் கௌரவம் தான். ஆனால் சிறு பிசிறு நடந்திருந்தாலும் பியான்ஸே இகழப்பட்டிருப்பார். ராஜா கொடுத்து வைத்தவர். பல நூறு டாலர்கள் பணம் கொடுத்துக் கண் மூடித்தனமாக ரசிக்கும் கும்பலுக்கு முன் தப்பும் தவறுமாக இசைக்கும் குழுவினரைக் கடிந்து அதற்காகக் கைத் தட்டலும் வாங்கித் தனக்கு அந்தத் தவறுகளில் எந்தப் பொறுப்புமே இல்லாதது போல் ஞானியாகப் பரிமளிப்பார். 

ராஜாவின் மேடை நிகழ்ச்சிகளுக்குச் சென்று அங்கேயிருந்து ஒவ்வொரு பாடலுக்கும் இதில் தாளம் தப்பியது, அதில் ராகம் பிசிறு என்று கமெண்ட் போட்டு விட்டுக் கடைசியாக இப்படியான நிகழ்வை நேரில் கண்டது தங்கள் பூர்வ ஜென்மப் புண்ணியம் என்று உருகுபவர்களை நேரில் காண எனக்கு ஆசை. 

ரஹ்மானின் நிகழ்வு ஒன்றை, திரைப் பாடல் நிகழ்ச்சி, விமர்சணம் (Review) செய்த நியூ யார்க் டைம்ஸ் விமர்சகர் நிகழ்ச்சி நேர்த்தியாகப் பிசிறில்லாமல் நடந்ததாக எழுதினார். நல்ல வேளை அவர் ராஜா நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை இல்லையென்றால் தமிழ் நாட்டின் மானம் கப்பலேறி இருக்கும். 

எனக்கு ரஹ்மான் மேடை நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில் பிரியமில்லை. ரஹ்மான் நிகழ்ச்சிகளில் அவர் தமிழ் பாடல்களை இசைக்கும் போது இந்திக் காரர்கள், டிக்கெட் வாங்க்யோரில் பெரும்பான்மை, ஓ என்று இரைச்சலிட பின் இந்திப் பாடல்கள் இசைக்கும் போது நம் தமிழ் சிங்கங்கள் பதிலுக்குக் கூச்சலிட நிகழ்ச்சியே அலங்கோலமானது 2000-இல். அதன் பிறகு இப்போதெல்லாம் ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளுக்கான விளம்பரத்திலேயே “மிகக் குறைந்த அளவே தமிழ் பாடல்கள்” இருக்கும் என்று சொல்கிறார்கள். யூட்யூபில் நான் நினத்த நேரத்தில் நிம்மதியாக என்னால் கண்டு களிக்க முடிவதை நான் ஏன் இந்தக் கும்பலோடு ரசிக்க வேண்டும்? 

மேலும் ராஜாவுக்கு மேடை நாகரீகம் சற்றும் கிடையாது. சமீபத்திய நிகழ்ச்சியில் ஒரு வாத்திய கலைஞரை பல்லாயிரக் கணக்கானோர் முன்பு “அறிவிருக்கா” என்று இகழ்ந்தார். இது அநாகரீகம். இசைக் குழுவின் பொறுப்பு ராஜாவுடையது. சரியான அளவு ஒத்திகை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கலைஞர் தவறே செய்திருந்தாலும் அக்குழுவின் தலைவராகத் தானே பொறுப்பேற்றுச் சபையோரிடம் மன்னிப்புக் கோர வேண்டியது ராஜா. கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் சினிமாவுக்குப் போன சித்தாளெல்லாம் ரசிகனாகக் கிடைத்ததால் தான் ராஜாவால் இப்படியொரு அநாகரீகச் செயலை செய்ய முடிந்தது. 

இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு பெண் பாடகியை ஒருமையில் அழைத்து மேடையிலேயே ஒரு பாடலுக்கு ஒத்திகை நடத்தினார் அப்பெண்ணுக்கு அப்பாடலைப் பாடத் தெரியுமா என்று. மார்க்கெட் இழந்து வேலை வெட்டியில்லாத இசை ஞானி இன்னும் நூறு நிகழ்ச்சி நடத்தினாலும் இந்தத் தரத்தில் தான் நடத்துவார் ஏனென்றால் அது தான் அவரின் தரம். 

ரஜினி, கமல், ராஜா, எஸ்.பி.பி - ஓரு வாக்குமூலம்: 

நான் சாதாரணன். நான் ஒன்றும் காலையில் எழுந்தவுடன் பீத்தோவனைக் கேட்டு, மதியத்தில் ஷேக்ஸ்பியர் படித்து, மாலையில் பாப் டிலனில் கரைந்து, இரவு ரவி ஷங்கரோடு கழிப்பவன் அல்ல. சராசரி வாழ்க்கை தான் என்னுடையது. ஆனால் சராசரிக்கும் மகோன்னதத்துக்கும் வித்தியாசம் அறிந்து ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைத்து விடுபவன். ரஜினி, கமல், ராஜா, எஸ்.பி.பி என் வளர் பருவத்தின் முக்கியப் பகுதிகள். இன்று முதுமையை நோக்கி நகரும் அவர்கள் வாழ்வில் நிகழும் தொழில் முறைத் தோல்விகள், பொருளாதார் இடர், உடல் நலக் குறைவு ஆகியன பற்றிக் கேள்விப்படும் போது மனம் ஒரு நிமிடமாவது அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று நினைக்கும். ஆனால் இன்று என் கலா ரசனைக்கு எதையும் கொடுத்து விட முடியாத வறிய நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் தலைச் சிறந்த பாடகர் சிம்பொனி பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லும் போது இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட கிணற்றுத் தவளைகள் என்று புரிகிறது. 

பாலகுமாரனின் ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலைக் கடந்து இன்று வெகு தூரம் பயணித்து விட்டாலும் இன்றும் அந்த நாவலைப் படிக்கும் போது துள்ளித் திரிந்த அக்கால நினைவுகள் வந்து மனதை நிறைத்து அவரைக் கனிவோடு நோக்க வைக்கும். அத்தகைய உணர்வு எனக்கு எப்போதும் ராஜா பற்றியும் உண்டு. 

தரப்படுத்தல் ஏன்: 

பல நூறு முறை ஜெயமோகன் எழுதிவிட்டார் ஏன் தரப்படுத்தல் தேவையென்று. சரவணப் பவன் தோசை உடுப்பி ஹோட்டல் தோசையை விடப் பெட்டரா என்று பேசுவதில் யாருக்கும் மனத்தடங்கல் கிடையாது ஆனால் தான் ரசித்துப் படிப்பது அல்லது அனுபவித்துக் கேட்டு ரசிக்கும் இசை ஆகியன பற்றி யாராவது அது தரமற்றது என்றோ தரக் குறைவு என்றோ சொன்னால் உடனே “நீ யார் அதைச் சொல்ல”, “ஏன் கம்பேர் பண்ணனும்?”, “எல்லாவற்றிலும் நல்லதை எடுத்துக்கலாமே?”, “தரப் படுத்தல் தேவையா?” என்று கேள்விக் கணைகள் பிறக்கும்.
 இசை, படிப்பு ரசனை ஆகியன நம்மைப் பிரதிபலிப்பவை என்று உணர்வதால் தான் அது குறித்து விவாதிக்கிறோம். எங்கே தோசை சாப்பிடுகிறோம் என்பது நம் பிரதிபலிப்பு அல்ல என்ற தெளிவே நாம் அவை பற்றித் தீவிரமாக விவாதிக்காமல் இருக்க உதவுகிறது. 

ராஜாவுக்குக் கொடுக்கும் மரியாதையை யாரும் தேவா, ஹம்ஸலேகா, மரகதமணி, ஜீ.வி. பிரகாஷ் ஆகியோருக்கு யாரும் கொடுப்பதில்லை. ராஜா ரசிகர்கள் ரஹ்மான் குறித்து மனத்தாங்கல் கொள்வது ஏனென்றால் அவர் ஒதுக்க முடியாமல் வளர்ந்துவிட்டவர் என்பதால். தரப்படுத்தல் ஏன் என்றும் கேட்கும் ராஜா ரசிகர்கள் தர வரிசையில் ராஜா முதலில் நிற்பதாக நினைப்பதால் தானே அவரைத் தொழுகிறார்கள்? அத்தரப்படுத்தலைத் தான் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். 

“ராஜாவையும் ரசிப்பேன், தியாகைய்யரின் கீர்த்தனையில் லயிப்பேன், பீத்தோவானை அறிந்துக் கொள்வேன்” என்பதில் தவறே கிடையாது ஆனால் பத்து, பத்து விநாடி பியூக் இசைக் கொடுத்தவரை பாக் என்று உருகும் போது தான் உங்கள் தரப்படுத்தல் கேள்விக்குள்ளாகிறது. 

நம் சமூகத்தினரோடு எனக்கு இருக்கும் ஆகப் பெரிய பிணக்குச் சாதாரணத்தைக் கொண்டாடுவதும் அதைச் சாதாரணம் என்று அடையாளம் காட்டினால் அதனால் வரும் எரிச்சலும் தான். 

‘பாரீஸுக்குப் போ’ சாரங்கன் சொல்வான்: “சினிமாப் பார்க்கும் பழக்கத்தால் அத்துடன் சேர்ந்து உங்களுக்கு வழங்கப்பட்ட அந்தச் சங்கீதம், மீண்டும் இசைத் தட்டுகளிலோ ரேடியோவிலோ உங்கள் காதில் படும் பொழுது உங்கள் ரசனையில் ஒரு சினிமா சூழ்நிலையை உருவாக்குவதால் இந்தச் சங்கீதம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது…அவ்வளவு தான். இண்தியாவின் தேசிய சங்கீதமே இந்தச் சினிமா சங்கீதம் என்று தயவு செய்து உங்கள் முகத்திலேயே நீங்கள் காறித் துப்பிக் கொள்ள வேண்டாம்….நீங்கள் சொல்லும் சினிமா சங்கீதம் ஓர் ‘இசைச் சோரமே’. அமெரிக்காவில் குடியேறியத் தமிழர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று தான். விதி வசத்தாலோ உங்கள் திறமையாலோ இன்று வேறொரு உலகில் இருக்கிறீர்கள் கொஞ்சம் உங்கள் அறிவை விசாலப்படுத்துங்கள், அதற்கான் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. ராஜாவை ரசிப்பதில் தவறில்லை ஆனால் அவரே நம் பண்பாட்டின் உச்சம் என்றும் நம் கலாசாரத்தின் பிரதிநிதியென்றும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். 

ராஸ்டிரபோவிச் எனும் இசைக் கலைஞன்:

ராஸ்டிரபோவிச் ஒரு ருஷ்ய இசை மேதை. செல்லோ எனும் வாத்தியத்தை இசைப்பதில் உலகப் புகழ் பெற்றவர். பெர்லின் சுவர் வீழ்ந்த போது அந்தச் சுவர் இடிக்கப்படும் தருணத்தில் அங்கே அமர்ந்து பாக் இயற்றிய செல்லோ இசையை வாசிக்க ஆரம்பித்து ஓர் வரலாற்றுத் தருணத்தில் நூற்றாண்டுகளுக்கு முன் இறந்த ஜெர்மானிய மேதையின் இசை எப்படி ஒரு கலையின் உச்சம் என்று காண்பித்தார். 



1991-இல் கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவை மீண்டும் கைப்பிடித்தப் போது அங்கேப் போராட்டம் வெடித்தது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படும் தருணத்தில் ராஸ்டிரபோவிச் உயிரைப் பணயம் வைத்து மாஸ்கோ வந்தடைந்து தெருவில் போராடும் மக்களோடு ஐக்கியமானார். இசையை மானுடத்தின் மிக உயரியக் கலையாக பாவித்த ஓர் கலைஞனே அப்படிச் செய்ய முடியும். இசையை ஓர் கலையாக பாவிக்கும் சமூகத்தில் தான் அப்படியொருக் கலைஞன் சமூகத்தின் ஆன்மாவாகவும் இருக்க முடியும். 

ராஸ்டிரபோவிச்சுக்குக் கொடுக்கும் மரியாதையை நான் எந்நாளும் இளையராஜா எனும் இசை வியாபாரிக்குக் கொடுக்க முடியாது.

Bibliography and Some Musical selections:


  1. Schubert's Winter Journey: Anatomy of an Obsession by Ian Bostridge
  2. Review of Ian Bostridge's book http://www.nybooks.com/articles/2015/04/02/magic-schuberts-songs/
  3. Who Needs Classical Music by Julian Johnson
  4. Johann Sebastian Bach: The Learned Musician by Christoph Wolff
  5. Catch a Fire:The life of Bob Marley by Timothy White
  6. Beethoven's Ninth: A political History by Esteban Buch
  7. The First Four Notes: Beethoven's Fifth and the Human Imagination by Matthew Guerrieri
  8. Raja and Fugue a Blog http://geniusraja.blogspot.com/2011/05/fine-fugue-fete.html
  9. Beethoven's 9th Symphony Performed by Leonard Bernstein in Berlin https://youtu.be/IInG5nY_wrU
  10. Bach's Partita for Violin. Considered the finest piece for Violin https://youtu.be/QqA3qQMKueA
  11. Bach Fugue for 6 voices https://youtu.be/vPDtJOlRNnM

Sunday, October 2, 2016

இந்தியாவின் நாற்றங்கால், காந்தி. செல்வந்தர்களின் செல்லப் பிள்ளையா? நீலகண்டனுக்கு மறுப்பு

காந்தியும் நேருவும் "பணத்தில் கொழித்துப் புரண்ட" குடும்பங்களில் இருந்து வந்து காங்கிரஸ் தலைமைக்கு வந்ததிலிருந்து இரண்டாம் நிலைத் தலைவர்கள் உருவாகாத "மலட்டுத் தன்மை" உருவானது என்று அரவிந்தன் நீலகண்டன் தன் கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். மதிமாறன் எனும் திராவிட இயக்கத்தவர் காந்தியின் உடை ஒரு காஸ்டியூம் என்று பேசியதை மறுத்து எழுதிய போது நான் நீலகண்டன் போன்ற இந்துத்துவர்களின் அவதூறையும் சுட்டிக் காட்டினேன். இன்று காந்தி ஜெயந்தி ஆகவே விரிவான மறுப்புரை.

கருணாநிதிகளையும் நரேந்திர மோடிகளையுமே பார்த்துப் பழகிய கண்களுக்கும் மனங்களுக்கும் காந்தியையும் நேருவையும் புரிந்து கொள்ளும் அறிவுத் திறன் இல்லாதது ஆச்சர்யமல்ல. காந்தி எப்படித் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் என்ற வரலாறைப் பின்னோக்கிப் பார்த்தல் அவசியம்

அரசியல் அனாதையான காந்தி

ஜனவரி 9 1915 காந்தி மும்பை வந்தடைந்தார். அவருக்குக் கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய தொண்டுகளுக்கு மதிப்பளித்து. வரவேற்புகளும் புகழுரைகளும் காந்தியைச் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்தன. நெடுங்காலமாக இந்தியாவில் வாழாதக் காரணத்தால் இந்தியாவை முதலில் அறிந்து கொள்ளும் வரை மவுனம் காக்கும்படி கூறிய கோகலேவின் கட்டளையை ஏற்றுக் காந்தி அரசியல் தளத்தில் மவுனம் காத்தார். அரசியலில் ஈடுபடாவிடினும் சமூகப் பணியாற்ற விழைந்த காந்தி கோகலே நடத்திய 'ஸர்வண்ட்ஸ் ஆப் இந்தியா'வில் இணைய விண்ணப்பித்தார். கோகலேவின் தோழர்கள் காந்தி சேருவதை விரும்பவில்லை. விண்ணப்பம் ஏற்கப் படவில்லையென்றாலும் பணியாற்ற விரும்பிய காந்தி சங்கத்தின் கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். துணுக்குற்ற கோகலே காந்தியை தடுத்தார். பின்னர் ஆசிரமம் தொடங்க காந்தி எத்தனித்த போது கோகலே தன் சங்கத்திலிருந்து பண உதவி செய்யப் படும் என்றார். ஆனால் ஒரே மாதத்தில் கோகலே இறந்தார். தலைமைப் பொறுப்பேற்ற ஸ்றீனிவாச சாஸ்திரியும் ஏனையோரும் காந்தியிடம் சங்கத்தின் விதிகளின் படி ஒரு வருடம் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டுமென்றனர். அதை ஏற்றுக் காந்தி இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். "பணத்தில் கொழித்துப் புரண்ட" குடும்பத்தில் பிறந்தவர் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பணித்தார். அவ்வகுப்புக் கழிப்பறைகளில் மலம் கனுக்கால் வரை தேங்கி நிற்கும் அவலைத்தைப் பின்னர்க் காந்தி எழுதினார். அந்நாட்களில் சென்றவிடமெல்லாம் கொண்டாடப் பட்டாலும் எந்த இயக்கமும் காந்தியை ஏற்கத் தயாரில்லை. காந்தி அரசியல் அனாதையாக உலா வந்த காலம் அது.



தமிழகம் வந்த ஏழை தேசாந்திரித் தம்பதி. மாயவரம் உரை.

பார்ப்பதற்கு வடக்கிலிருந்து வந்த ஏழை தேசாந்திரிகள் போல் துணி மூட்டையுடனும், கசங்கிய உடையிலும் ரயிலின் மூன்றாம் வகுப்பில் இருந்து காந்தியும் கஸ்தூரிபாவும் சென்னை புகை வண்டி நிலையத்தில் இறங்கினார்கள் என்கிறார் டி.ஜி. டெண்டுல்கர். ஜி.ஏ. நடேசன் வீட்டில் ஒதுக்கப்பட்ட அறையில் மேஜை, நாற்காலி, படுக்கை என்று ஏற்பாடாகியிருந்தது அவற்றை அப்புறப் படுத்த சொன்னார் காந்தி.

டெண்டுல்கரின் புத்தகத்தில் காணப்படும் உரைகளின் தமிழாக்கம் "தமிழ் நாட்டில் காந்தி' எனும் புத்தகத்தில் கிடைக்கிறது. ஏப்ரல் 21 1915 நடந்த வரவேற்பில் தமக்களிக்கப் பட்ட புகழுரைகளை மறுதலித்த காந்தி தென்னாப்பிரிக்கப் போராட்டங்களில் உயிர் நீத்த தமிழர்களை நினைவுக் கூர்ந்து "அந்தப் பெரிய மனிதர்களுக்கும் மாது சிரோன்மணிகளுக்கும் நான் உணர்வூட்டியதாக நீங்கள் கூறீயிருப்பதை நான் ஏற்க முடியாது. நம்பிக்கையுடன் எவ்விதமான பலனையும் எதிர்பாராது பணியாற்றிய அந்த எளிய மக்கள் தான் எனக்கு உணர்வூட்டியவர்கள்". அன்றும் இன்றும் இப்படித் தனக்கான புகழுரைகளை மறுத்த தலைவர்கள் சொற்பம். காந்தியின் அடியொற்றி வந்த நேரு அத்தைகயப் பண்பாளராக இருந்தார். அது அவர் காந்தியிடம் பயின்றது.

சென்னையில் அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஸ்தாபனங்களைக் கண்ட காந்தி ஸ்தாபனத்துக்குரிய கட்டிடங்கள் படாடோபமாகவும் 'பஞ்சமர் பள்ளி' தகரக் கொட்டகையில் இயங்குவதையும் கண்டு வெகுண்டார். பின்னர் மாயவரத்தில் பேசிய காந்தி தீண்டாமை பற்றிக் கடுமையாகப் பேசினார்.

"தங்களுடைய தற்கால நிமைமை பூர்வீகத் தவபலத்தால் தலைமுறை தத்துவமாய்க் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள்...வெளிநாடுகளில் இருந்து கொண்டு நான் இந்து மதத்தைப் பற்றி அறிந்த வரை தாழ்த்தப்பட்டோர் முதுகில் ஏறி உட்காருவது இந்து மதமல்ல என்றே தெரிந்தது. இது தான் இந்து மதம் என்று என்னிடம் மெய்ப்பிக்கப்பெற்றால், நான் அதன் பகிரங்க விரோதியாவேன்."

காந்தியின் கருத்துகளை வெறும் பேச்சுகள் என்று ஒதுக்கிவிடக் கூடாது. காந்தியைப் போலல்லாது ஏழமையில் பிறந்த திலகர் பெண்கள் கல்வி, குழந்தைகளை மணம் செய்விப்பது, தாழ்ந்த சாதியினரின் கல்வி என்று ஒன்று விடாமல் எல்லாவற்றிலும் அதி தீவிர சநாதன இந்துவாகவே இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏழ்மையில் பிறந்தார்களா செல்வம் கொழிக்கும் குடும்பங்களில் பிறந்தார்களா என்பதல்ல முக்கியம் என்ன வாழ்க்கை வாழ்ந்தார்கள் யாருக்காகப் பேசினார்கள் எதன் பொருட்டுப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பது தான் முக்கியம். ஒரு புறம் சநாதனம் பேசிய திலகர் இன்னொரு புறம் பிராமணீயத்தை தேசிய விழுமியங்களாக முன்னிறுத்திய பெஸண்ட் இவர்களிடையே எல்லோரும் கொண்டாட விரும்பிய ஆனால பின்பற்றத் தயாரில்லாத காந்தி.

மேலும் பேசிய காந்தி "இங்கே வரவேற்புரை ஆங்கிலத்தில் இருந்தது. காங்கிரஸ் மாநாட்டில் சுதேசிக் கொள்கையை ஆங்கிலத்தில் பிரகடனம் செய்கின்றார்கள்....நான் ஆங்கிலத்திற்கு எதிரியல்ல ஆனால் பிராந்திய மொழிகளின் சமாதியின் மீது ஆங்கிலம் எழுப்பப்படுமானால் நீங்கள் உண்மையான சுதேசித்தன்மையை ஆதரிக்கவில்லை என்பேன்". காந்திக்குப் பிறகு தான் காங்கிரஸில் பிரதேச மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸை மையப்படுத்தப் பட்ட ஸ்தாபனமாக இருந்ததைப் பிரதேசக் கிளைகள் திறக்கச் செய்து பிரதேச மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்த வைத்து எல்லாத் தளத்திலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டத் தலைவர்கள் மலரக் காரணம் காந்தியே.

"காந்தி, உட்கார்" வாரணாசியில் மோதிய காந்தியும் அன்னி பெஸண்டும்

பிப்ரவரி 4 1916 வாரணாசி இந்துப் பல்கலைக் கழகத் திறப்பு விழாவில் அன்னி பெஸண்டுடன் பேச அழைக்கப் பட்ட காந்தி வைஸ்ராயும், ராஜா ராணிகளும் செல்வந்தர்களும் வீற்றிருந்த மேடையில் சன்னதம் செய்தார்.

"விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றேன். அக்கோவில் இருக்கும் தெரு அசுத்தமாக இருக்கிறது. இது சரியா? இந்துவாக வலியோடு பேசுகிறேன். நம் கோவில்களே சுத்தத்திற்கும் விசாலத்திற்கும் எடுத்துக் காட்டாக இல்லாமல் போனால் நாம் அமைக்கப் போகும் சுயராஜ்ஜியம் எப்படி இருக்கும்?"

போலீஸ் பாதுகாப்போடு வளைய வந்த வைஸ்ராயை, "இப்படி வாழும்போதே செத்துக் கொண்டிருப்பதை விட வைஸ்ராய் செத்து விடலாம்". தீவிரவாதிகளின் மன நிலை புரிந்து கொள்ளக் கூடியது என்றார் காந்தி. சினத்தின் உச்சிக்குச் சென்ற பெஸண்ட் "காந்தி, உட்கார்" என்று ஆணையிட்டார்.

சம்பரான் போராட்டமும் காந்தி தலைமை நோக்கி நகர்ந்ததும்

கோகலேவின் மறைவுக்குப் பிறகு 1916-இல் கூடிய லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் திலகர் மீண்டும் காங்கிரஸில் இனைந்தார். ஒரு புறம் முஸ்லீம்களூடனான ஒப்பந்தம், திலகர் இனைப்பு, தீர்மானங்கள் என்று மாநாடு முக்கியத்துவம் பெற்ற போது அங்கே எந்தத் தலைமைப் பொறுப்பிலுமில்லாத காந்தியை ஓர் ஏழை விவசாயி அனுகினான்.

வடக்கே நேபாளத்தை ஒட்டிய பீகார் மாநிலத்தைச் சார்ந்த சம்பரான் எனும் கிராமத்து விவசாயிகளின் கண்ணீர் கதையைக் காந்தியிடம் சொன்னான் அந்த விவசாயி. அம்மாநாட்டில் குழுமியிருந்த அத்தனை தலைவர்களிடமும் செல்லத் துணியாத அந்த விவசாயி காந்தியை, ஒரு குஜராத்தியை, அணுக முடியும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு அவ்வாறே செய்கிறான்.

சம்பரான் போராட்டம் பற்றி அறிய சிறந்த புத்தகம் ஜூடித் பிரவுன் எழுதிய "Gandhi's Rise to Power: Indian Politics 1915-1922". காந்தியின் தலைமை மலட்டுத் தன்மை வாய்ந்தது என்று விஷம் கக்கும் நீலகண்டன் போன்றோர் படிக்க வேண்டிய புத்தகம் அது.

ராஜேந்திர பிரசாத், கிருபளாணி என்று ஒரு சிறு அணி ஏற்கனவே சம்பரானில் இயங்கி வந்தது. தொண்டாற்றும் வழக்கறிஞர்கள் காசு பெறலாகாது என்று அவர்களுக்குக் காந்தி உணர்த்தினார். பின்னர்த் தான் சிறை செல்லத் தயாராக இருப்பதாகச் சொல்லி "எனக்குப் பிறகு இப்போராட்டத்தை யார் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று வினவினார்". "நீங்கள் சிறைக்குச் சென்று விட்டால் அதன் பிறகு எங்களுக்கு இங்கென்ன வேலை நாங்கள் எங்கள் ஊருக்குப் போய் விடுவோம்" என்றார்கள் அந்த வழக்கறிஞர்கள். பதிலைச் சொன்னப் பிறகு தான் காந்தி எதிர்ப்பார்ப்பது அவரைப் பின் தொடர்ந்து தாங்களும் சிறைச் செல்லத் தயாராக வேண்டுமென்பதே. உண்மை உரைத்த தொண்டர்கள் இசைந்தனர்.

பிரவுன் சொல்கிறார், "சம்பரான் போராட்டத்தின் போது காந்தி அக்கிராமத்தின் உயர் குடியினரின் தொடர்பை தவிர்த்தார்". "காந்தியின் முக்கியமான உதவியாளர்கள் நடுத்தர வர்க்க படித்தவர்களும் குக்கிராமங்களிலுள்ள சிறு வியாபாரிகளும்". ஒரு வெகுஜனப் போராட்டத்தில் முரன்பாடுகளுடைய தூய எண்ணமற்றவர்களும் இணைவார்கள் அவர்களையும் ஒதுக்காமலே தான் முன் செல்ல வேண்டுமென்று காந்தி உணர்ந்திருந்தார்.

காந்தியின் போராட்ட முறைகளைப் பற்றிப் பிரவுன் ஒரு வித வியப்புடனே விவரிக்கிறார். சம்பரானை ஒரு விவசாயப் போராட்டமாக மட்டுமே காந்தி முன்னிறுத்தினார். அதில் எவ்விதமான விடுதலைப் போராட்டத்தின் சாயலையும் அவர் அனுமதிக்கவில்லை ஏனென்றால் அது பிரச்சினையைத் திசை திருப்பி விடுமென்பதால். பத்திரிக்கைகளுக்குச் செல்லும் செய்திகளைக் கவனமாக ஒழுங்குப் படுத்தினார். போராட்டத்திற்கு விளம்பர வெளிச்சம் தேவைப் படும் போது மட்டும் செய்திகளை ஊக்குவித்து மற்ற நேரங்களில் செய்திகள் பரவுவதையோ அவை போராட்டத்தின் தன்மையைச் சிதைத்துவிடுவதையோ தடுத்தார். பிரசாத்தும், கிருபளானியும் ஆயிர கணக்கான விவசாயிகளிடம் நேர்முகம் நடத்தி ஆய்வறிக்கையைத் தயார் செய்தனர். காந்தியும் அவர் குழுவும் அதற்கு முன்னர் எந்த அரசியல் வாதியும் செல்லாத குக்கிராமங்களுக்குச் சென்றனர். காங்கிரஸில் இதற்கு முன்னர் யாரும் இப்படிச் செய்ததில்லை.

காந்தி எப்போதும் முழுமையான விடுதலை நோக்கி நகர்தலையே விரும்பினார். சம்பரானில் வெறும் விவசாயக் கஷ்டங்களை நிவர்த்திச் செய்வது என்பது அவர் வழியல்ல. அம்மக்களின் வறுமை அவரை வருத்தியது. பள்ளிகள் நிறுவினார், அதற்குத் தன்னார்வலர்களைச் சேர்த்தார். மக்கள் அழுக்கையே உடுத்துவது கண்டு சுத்தமான உடைகள் அணிய வேண்டுமென்றார். கஸ்தூரிபாவை தன் குடிசைக்கு அழைத்துச் சென்ற ஓர் ஏழைப்பெண்மணி தன்னிடம் இருப்பதே ஓர் ஆடை தான் ஆகவே துவைத்து வேறு உடை அணிய முடியாதென்று காட்டி கலங்க வைத்தார். காந்திக்கு முன்பிருந்த அரசியல் வாதிகள் யாரும் இது பற்றியெல்லாம் அறிந்ததுமில்லை இவற்றைப் பொருட்படுத்தியதுமில்லை.

திலகர் இந்திய வரலாற்றில் முக்கியப் பங்காற்றினார் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் காந்தியே முதன் முதலில் சுதந்திரம் என்பது வெறும் காலணியாதிக்கத்திடமிருந்து விடுதலைப் பெறுவதல்ல மாறாகச் சமூகமும் அதை உருவாக்கும் தனி மனிதனும் விடுதலையடை வேண்டுமென்று அதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பனித்தார். திலகர் சிறைச் சென்ற காலங்களில் சிறைகள் மனிதத் தன்மையற்றவையாக இருந்தது உண்மை ஆனால் திலகர் ஒன்றும் வெகுஜனப் போராட்டத்திற்காகச் சிறைச் செல்லவில்லை என்பதும் கசப்பான உண்மை. காந்திக்கு முன் எத்தனை வெகுஜனப் போராட்டங்களைக் காங்கிரஸ் முன்னெடுத்தது? காந்திக்குப் பின் எத்தனை?

சாதாரணப் பிரதேசத் தொண்டனாக இருந்த பிரசாத் பின்னர்த் தேசத் தலைவரானார். சம்பரானைத் தொடர்ந்து குஜராத்தில் கேதா மற்றும் அகமெதாபாத் ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் சார்பில் முக்கியமான போராட்டங்களை முன்னெடுத்தார். குஜராத்தில் இப்போராட்டங்களில் காந்திக்குத் துணையாக இருந்த பின்னாளில் சர்தார் என்று பெயரெடுத்த வல்லபாய் பட்டேல். வரலாற்றில் சீஸரும் அலெக்ஸாந்தரும் இத்தனை தளபதிகளை உருவாக்கியதில்லை. அமெரிக்கச் சுதந்திர வரலாற்றில் வாஷிங்டன் யாரையுமே உருவாக்கவில்லை என்று சொல்லலாம். ருஷ்யப் புரட்சியும் அப்படியே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உருவான அளவு இரண்டாம் நிலை தலைவர்கள் வேறெங்கும் வேறெப்போதும் உருவானார்களா என்பது சந்தேகம். அப்படி உருவானவர்கள் எல்லோரும், காந்தியை எதிர்த்தவர்கள் உட்பட, காந்தியோடும் அவர் உருவாக்கியச் சூழலோடும் தொடர்புடையவர்களே.

1919-20 நெருங்கிய போது பிரசாத் என்ற பீகாரி, நேரு என்ற காஷ்மீரி, ராஜாஜி என்ற தமிழர், பட்டேல் என்ற குஜராத்தி, கிருபளானி, மகாதேவ் தேசாய் என்று தேசம் தழுவிய முரன்பாடுகளுடைய ஒரு பெரும் கூட்டம் காந்தியின் பின் அணிவகுத்து நின்றது. பஞ்சாப் படுகொலைக்குப் பிறகு 1920 ஆகஸ்டு 1-ஆம் தேதி மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்திருந்தார் காந்தி. அதே நாளில் திலகர் மறைந்தார். அதன் பின் முப்பதாண்டு காலம் காந்தி இந்தியாவில் விஸ்வரூபமெடுத்தார் என்றால் மிகையாகாது.

போலீஸ் தடியடியில் காயம்பட்ட ஜவஹர்லாலும் ஸ்வரூப் ராணியும்

நேரு குடும்பத்தினரின் செல்வ செழிப்பு மிகுந்த காழ்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களின் தியாகம் மெச்சத் தக்கது. ஆனால் இழப்பதற்கு நிறைய இருந்து அவற்றை இழக்கத் தேவையில்லாதவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு இழப்புகளைச் சுமந்ததும் வணங்கத் தக்கதே. சுதந்திரத்தின் பின் நேருவும் அவர் தங்கையும் அடைந்த புகழும் அதிகார பீடங்களில் அமர்ந்ததும் பலருக்கு இன்றும் ஒவ்வாமையைத் தருகிறது. நேரு குடும்பத்தினர் செல்வ செழிப்போடு கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் நீலகண்டன் அவர்கள் பின்னாளில் காந்தியினால் ஈர்க்கப்பட்டு இந்திய உடைகளைத் தரித்ததும் சிறைச் சென்றதும் போலீஸ் தடியடிகளில் காயம் பட்டதையும் சேர்த்திருக்கலாம். ஆனால் அதெற்கெல்லாம் ஓர் அடிப்படை நேர்மை வேண்டுமே.

போலீஸ் தடியடியில் அடி வாங்கியது பற்றி நேரு ஓர் அத்தியாயமே எழுதியிருப்பார் தன் சுயசரிதையில். தான் அடிப்பட்டதைப் பிரலாபிக்கும் நோக்கத்தில் எழுதவில்லை மாறாக ஒரு இளைஞனாகத் தான் திருப்பி அடிக்கும் உணர்வைக் கட்டுப் படுத்தியதையும் அத்தகைய வன்முறைகளை எதிர் கொண்ட மன நிலையையும் விவரித்திருப்பார் நேரு. நேருவின் அம்மா ஸ்வரூப் ராணி செல்வ சீமாட்டி அவரும் வீதிக்கு வந்து போராடுகிறார் அதுவுமில்லாமல் தடியடியில் காயப்பட்டார். காந்தி எவ்வகையான குடும்பத்தில் பிறந்தார் என்பதை விட இங்கே நாம் ஆச்சர்யப்பட வேண்டியது பல செல்வந்தர்களும், செல்வம் ஈட்டும் கல்விப் பெற்றவர்களும் அதையெல்லாம் துறந்து துயர் அனுபவிக்கத் தயாரானது தான். அதுவும் வசதியான வீட்டுப் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டது மாபெரும் புரட்சி. கேதா போராட்டத்தில் மண் சுமந்த அனுசுயா பென் பணக்கார முதலாளியின் பெண்.

நேருக் குடும்பத்தில் சிறைச் செல்லாத பெண்ணே கிடையாது. சிறைவாசத்தின் நடுவே நோய்வாய்ப்பட்ட தன்னைக் காணவந்த நேரு சிறைக்குத் திரும்பிச் செல்லும் முன் அவரைத் தன்னருகே அழைத்து ஈனஸ்வரத்தில் "அரசாங்கத்திற்கு ஏதும் உத்தரவாதம் கொடுத்து விடாதீர்கள்" என்று கூறுகிறார் எங்கே தன் கணவன் தன் பொருட்டு மண்டியிட்டுவிடுவாரோ என அச்சப்பட்டு. நேரு தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்தார்.

வன்முறைக்கு எதிர்வினை வன்முறையல்ல என்ற கருத்துடைய ஷெல்லியின் "மாஸ்க் ஆப் அனார்க்கி" (Mask of Anarchy) காந்திக்கும் நேருவுக்கும் உவப்பான ஒரு கவிதை. இருவரும் அதை மேற்கோள் சொன்னதுண்டு.

And if then the tyrants dare
Let them ride among you there,
Slash, and stab, and maim, and hew,-
What they like, that let them do.

'With folded arms and steady eyes,
And little fear, and less surprise,
Look upon them as they slay
Till their rage has died away.

தடியடியில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக லாலா லஜபதி ராய் இறக்கவும் நேர்ந்தது. "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா" என்று பாரதி ஆருடமாக எழுதினான்.

காந்தி-பிர்லா உறவு: செல்வந்தர்களும் காங்கிரஸும்

அகாகான் மாளிகையில் சிறைவாசம் இருந்ததையும் கடைசி நாட்களில் பிர்லா மாளிகையில் தங்கி இருந்ததையும் வைத்தே காந்தி என்னமோ செல்வந்தர்களின் செல்லப் பிள்ளையாக இருந்தது போலவும் காங்கிரஸை மிட்டா மிராசுகளுக்குத் தாரை வார்த்தார் என்றும் திமுக மேடைகள் முதல் இந்துத்துவ முகாம்கள் வரை ஒரு அவதூறு பரப்பப்படுகிறது.

"In search of Gandhi" என்ற புத்தகத்தில் பி.ஆர்.நந்தா இந்த அவதூறை திட்டவட்டமாக மறுப்பதுடன் இந்திய முதலாளிகளுடனான காந்தியின் உறவு பற்றி அழகான கட்டுரை ஒன்றைத் தருகிறார்.

இந்திய முதலாளிகள் காங்கிரஸை பயன்படுத்திக் கொண்டது தான் அதிகம் காங்கிரஸ் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டதை விட. சுதேசி தொழிற்சாலைகளின் பாதுகாப்பிற்காகக் காங்கிரஸின் உதவியை நாடி அதில் பயனும் பெற்ற பிறகு தேர்தல் நிதி கோரிய மோதிலால் நேருவிடம் அகங்காரத்தோடு காந்தி உட்பட மற்ற காங்கிரஸ் தலைவர்களோடு நேர்முகம் வேண்டும் என்று கேட்டபோது மிகக் கடுமையான கடிதமொன்று எழுதி மறுத்தார் மோதிலால் நேரு.

ஜம்னாலால் பஜாஜ் போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே முதலாளிகள் காங்கிரசிற்கு உதவினர். பிர்லா தன் உறவு காந்தியோடு தான் காங்கிரசோடு அல்ல என்பதை அரசுக்குத் தெளிவுப் படுத்தினார். 1920 ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த போது டாடா உட்படப் பல முதலாளிகள் இயக்கித்திற்கு உதவ மறுத்ததோடு எதிர் அணியையே துவக்கி மும்முரமாக எதிர்த்தனர். பின்னாளில் ஜவஹர்லால் நேரு, பூலாபாய் தேசாய், கோவிந்த் பல்லப் பந்த் ஆகியோர் நிதித் திரட்ட செல்வந்தர்களை அணுகியபோது கல்லில் நார் உரிப்பதை விட அதிகம் கஷ்டப்பட்டனர்.

காந்தி எப்போதும் தில்லியில் சேரிகளில் தான் தங்குவார். ஜனவரி 1948-இல் கலவர பூமியான தில்லியில் சேரியில் தங்குவது அங்கிருப்போருக்குச் சங்கடத்தை உண்டாக்கும் என்று தான் பிர்லா மாளிகையில் தங்கினார். காந்தி சேரியில் தங்கினால் அதிகாரிகளும், செல்வந்தர்களும் அங்கே சென்றனர்; மாளிகையில் தங்கினாலோ சாமான்யர்களும் அங்கே சென்றனர். காந்தி எங்கே தங்கினாலும் அதைச் சமத்துவப் பூங்காவாக்கினார் என்பது தான் முக்கியம்.

விவிலியத்தில் பணக்காரன் கொடுக்கும் கொடையை விட ஏழைப் பெண்மனி கொடுக்கும் கொடையே சிறந்தது என்பார் இயேசு. இயேசு என்பவர் வாழ்ந்தாரோ இல்லையோ காந்தி என்பவர் வாழ்ந்தார்.

'காந்தியின் வருகை' - நேரு

ஜவஹர்லால் நேரு "டிஸ்கவரி ஆப் இந்தியா" (Discover of India) புத்தகத்தில் காந்தியின் வருகை எத்தகைய மாற்றத்தை உண்டுப் பண்ணியது என்று அவருக்கேயுரிய நுண்ணுணர்வுடன் விவரித்தது எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடம்.

"He was like a powerful current of fresh air that made us stretch ourselves and take deep breaths; like a beam of light that pierced the darkness and removed the scales from our eyes; like a whirlwind that upset many things, but most of all the working of people's minds. He did not descend from the top; he seemed to emerge from the millions of India, speaking their language and incessantly drawing attention to them and their appalling condition.....The greatest gift for an individual or a nation, so we had been told in our ancient books, was abhaya, not merely bodily courage but the absence of fear from the mind....against all pervading fear that Gandhi's quiet and determined voice was raised: Be not afraid.

Gandhi influenced millions of people in India in varying degree. Some changed the whole texture of their values, others were only partly affected, or the effect wore off; and yet not quite, for some part of it could not be wholly shaken off."

இன்றளவும் என் அரசியல் பார்வையை, அமெரிக்க அரசியலோ இந்திய அரசியலோ எதுவாயினும், காந்தியப் பார்வை ஆக்கிரமித்திருக்கிறது.



காந்தியின் எளிமைப் பற்றி ஜெயமோகன்

காந்தியின் எளிமைப் பற்றிய எள்ளி நகையாடல்களுக்கு பதில் சொல்லும் முகமாக ஜெயமோகன் எழுதியக் கட்டுரை முக்கியமானப் பார்வையை முன் வைக்கிறது. அக்கிட்டுரையில் நேருப் பற்றிய காழ்ப்பு மிகுந்த கருத்துகளை அவர் இன்றும் அப்படியே கொண்டுள்ளாரா என்றுத் தெரியாது அது முக்கியமுமல்ல. அக்கட்டுரையில் இருந்து ஒருப் பகுதி:

"காங்கிரசுக்கு காந்தி காலத்தில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் முழுநேர ஊழியர்கள் இருந்தார்கள். சம்பளம் பெறும் ஊழியர்கள்.  அவர்களுக்கு மாதம் எட்டணா ஊதியம் அளிக்கப்பட்டது. படுகேவலமான வறுமையில்தான் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். வக்கீல்கள், ஜமீந்தார் பிள்ளைகள், பட்டதாரிகள் அந்த ‘வருமானத்துக்குள்’ வாழ்ந்து ஊர் ஊராகச் சென்று பணியாற்றினார்கள். வெறுந்தரையில் படுத்து இரந்து உண்டு கால்நடையாக அலைந்தார்கள். 

எண்ணிப்பாருங்கள், காந்திவரும்வரை காங்கிரஸில் அந்தப் பண்பாடு இருந்ததா? சட்டமேதைகளும் பேராசிரியர்களும் முதல்வகுப்பில் சென்று கட்சிகட்டிய காலம் அது. வருடம்தோறும் மாநாடு போடுவதற்கு அல்லாமல் எதற்கும் காங்கிரஸ் கூடாமலிருந்த காலம். [உண்மையில் காங்கிரஸ் என்ற பேரே மாநாடு என்ற பொருளில்  போடப்பட்டது. வெறுமெ கூட்டங்கள் நடத்துவதற்கு மேலாக காங்கிரஸை ஒருவெகுஜன இயக்கமாக ஆக்கும் நோக்கமேதும் முன்னோடிகளுக்கு இருந்ததில்லை.] எளிய மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பும் இல்லை. காந்தி எப்படி பலலட்சம் ஊழியர்களை கவர்ந்தார்? கோகலேயிடமும் திலகரிடமும் இல்லாத எது அவரிடம் இருந்தது? எளிமை. முன்னுதாரணமான எளிமை."

வரலாற்றுத் திரிப்பே தொழிலாக.

மதிமாறன் பெரியார் திடலில் விநியோகிக்கப்படும் துண்டறிக்கைகளைத் தாண்டி வேறெதுவும் படித்து விடக் கூடாதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். நீலகண்டன் அப்படியல்ல. அதனாலேயே நீலகண்டனுக்குப் பரவலாக ஒரு பிம்பம் உண்டு. நீலகண்டனின் பார்வைகளோடு ஒத்துப் போகாதவர்கள் கூட அவரை ஒரு ஆராய்ச்சியாளராக முன்னிறுத்துவதைக் கண்டிருக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டனைப் போல் வரலாறைத் திரிப்பதற்கும், தேர்ந்தெடுத்த உண்மைகளின் (selective truth telling or half truths) துணைக் கொண்டு தன் தரப்பை நிறுவுவதற்கும், அடிப்படை நேர்மையைக் காற்றில் பறக்க விட்டு எழுதுவதற்கும் இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். அவருடைய கட்டுரைகள் முதல் சமீபத்தில் வெளிவந்த 'இந்திய அறிதல் முறைகள்' வரை கொஞ்சம் நெருங்கி தகவல்களைச் சரி பார்த்தால் திரிபுகள் அம்பலம் ஆகும். ('இந்திய அறிதல் முறைகள்' குறித்து விரிவான விமர்சணம் அல்லது கட்டுடைப்புச் செய்ய உத்தேசம். காலம் கனிய வேண்டும்).

டான் அஷோக் என்னும் திமுக அனுதாபி ஒருவர் இன்று (காந்தி ஜெயந்தி) எழுதுகிறார் காந்தி சாதி ஒழிப்புக்குப் பாடு படவில்லையென்று. திமுக அனுதாபி அல்லவா திமுக மேடைப் பேச்சுகளைத் தவிர வேறொன்றும் படித்தறியாதவர் போலும். ஜோசப் லெலிவெல்ட் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு யாத்திரைப் பற்றி ஆச்சர்யம் பொங்க எழுதியுள்ளார். தன் வாழ்நாளெல்லாம் தீண்டாமைக்கெதிராக உழைத்தவர் காந்தி. 'பிராமணர்கள் நடு நடுங்க வேண்டும்' என்ற பிரகடணத்தோடு உதயமான ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்களெல்லாம் தீண்டாமை ஒழிப்புக்கு என்ன செய்து கிழித்தார்கள் அவரவர் ஜாதியில் எல்லாம் தீண்டாமையை ஒழித்துச் சமபந்தி போஜனம் நடத்தி விட்டார்களா என்ன?

காந்தியை விமர்சிக்கவே கூடாதா என்று கேட்பவர்களுக்கு என் பதில் என்றும் "காந்தியே அவரின் முதல் விமர்சகர்". சம காலத்தில் காந்தி விமர்சிக்கப் பட்டார், சிலரால் முழுவதுமாக நிராகரிக்கவும் செய்யப் பட்டார்.

ஜூடித் பிரவுன் தொகுத்த "The Cambridge Companion to Gandhi" அற்புதமான கட்டுரைகளைக் கொண்டது. தனிகா சர்க்கார் என்பவர் துல்லியமாக "காந்திக்குச் சாமான்யனை நோக்கிப் பேசத் தெரிந்தது. ஆனால் அவர் எப்போதும் சாமான்யனுக்காகப் பேசினார் என்று சொல்ல முடியாது". நகர்புற வாழ்க்கை, நகர்புறத்தாரின் விழுமியங்கள் குறித்த காந்தியின் பார்வை, குஹா காந்தி பற்றி முன் வைத்த விமர்சனங்கள் ஆகியவற்றைச் சரமாகத் தொகுத்துள்ளார்.

நம் சமூகத்தில் இன்றும் அவதூறூக்கும் விமர்சனத்திற்கும் வித்தியாசம் தெரியாததே மிகப் பெரிய நோய்.

இந்தியாவின் நாற்றங்கால்

காந்தியை கடுமையாக விமர்சிக்கவும் நிராகரிக்கவும் செய்யலாம் ஆனால் அதில் ஒரு அடிப்படை நேர்மை வேண்டும். அது அரவிந்தன் நீலகண்டன், மதிமாறன் போன்றோரிடம் கிடையாது. காந்தியை நிராகரிப்பதில் இந்துத்துவர்களும் பெரியாரிஸ்டுகளும் கைக்கோர்த்தே செயல்படுகிறார்கள். திராவிட இயக்கத்தினரின் எழுத்துகள் புறங்கையால் எளிதாகத் தள்ளிவிடக் கூடியவை. இந்துத்துவர்களின் பிரச்சார உத்திகள் கோயபல்ஸையே பள்ளி மாணவன் தரத்தில் பின் தள்ளக் கூடியவை.

நியு ஜெர்ஸியில் உரையாற்றிய ஜெயமோகன் இந்திய இலக்கியத்தின் ஆளுமைகளுக்குக் காந்தி எப்படியொரு மைய ஈர்ப்பாக இருந்தார் என்று நிறுவி இந்திய இலக்கியத்தின் நாற்றங்கால் காந்தி என்றார். அதை இன்னும் நீட்டித்து இந்தியாவின் நாற்றங்கால் என்பது மிகப் பொறுத்தம்.


References:

1. அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை http://www.tamilhindu.com/2013/11/tea2/
2. 'Mahatma' by D.G. Tendulkar Vol 1. Pages 156-234
3. 'The Life of Mahatma Gandhi' by Louis Fischer. Pages 157-176, 189-197
4. 'Gandhi's Rise to Power: Indian Politics 1915-1922' by Judith Brown. Pages 16-123
5. 'Jawaharlal Nehru' by Sarvepalli Gopal - Vol 1. Pages 172-193
6. 'Discovery of India' by Jawaharlal Nehru pages 358-359
7. 'In search of Gandhi: Essays and Reflections' by B.R. Nanda. Pages 124-138
8. 'தமிழ் நாட்டில் காந்தி' - அ.ராமசாமி pages 166-170
9. 'காந்தியின் எளிமையின் செலவு' - ஜெயமோகன் கட்டுரை http://www.jeyamohan.in/557#.V_Gwljvijoo
10. 'The Cambridge Companion to Gandhi' Edited by Judith Brown and Anthony Parel. Pages 173-199
11. Autobiography by Jawaharlal Nehru